விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்ற குமாரபாளையம் நகர் மன்ற கூட்டம்
குமாரபாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகரமன்ற கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் நகராட்சி மன்ற கூட்டத்தில் மாற்றுக்கட்சிக்கு செல்வதாக கூறி தி.மு.க.வில் பதவி பெற்றீர் என நகராட்சி தலைவரிடம் அ.தி.முக.வினர் கூறினர்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர சாதாரண கூட்டம், மற்றும் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த விவாதங்கள் வருமாறு:
வெங்கடேசன் (துணை தலைவர்)- நகராட்சி தலைவராக பொறுப்பு வகித்து சேவை செய்து வரும் உங்களுக்கு, தி.மு.க. வில் குமாரபாளையம் வடக்கு நகர பொறுப்பாளராக முதல்வர் அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளீர். நகராட்சி சேவையுடன், கட்சியிலும் சேவை செய்து கட்சியை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வாழ்த்துக்கள்.
பாலசுப்ரமணி (அ.தி.மு.க.)- மாற்றுக்கட்சிக்கு செல்வதாக கூறியே, தி.மு.க.வில் பதவி பெற்று விட்டீர். கடந்த மாத நகராட்சி கூட்டத்தில் இதே நகராட்சி தலைவர்தான், என்னை தி.மு.க.வினர் பணி செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். அச்சுறுத்தல் கொடுக்கிறார்கள். தி.மு.க. போல் மோசமான கட்சி எதுவும் இல்லை. அ.தி.மு.க. தான் எனக்கு பாதுகாப்பு என்றெல்லாம் கூறி விட்டு, இப்போது அதே கட்சியில் பொறுப்பு வாங்கி விட்டீர்கள்.
வெங்கடேசன் (துணை தலைவர்)- ஒரு நகராட்சி தலைவரை உங்கள் கட்சியில் சேர்க்க, தூக்கிக் கொண்டு போகத்தான், உங்கள் முன்னாள் முதல்வர் காத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி நீங்கள் இருக்கும் போது, அதே நகராட்சி தலைவருக்கு பொறுப்பு கொடுத்து, தக்க வைக்க எங்கள் தலைவருக்கு தெரியாதா? அதைதான் மக்கள் நன்மைக்காக எங்கள் தலைவர் செய்துள்ளார்.
(இந்த விவாதம் நீண்ட நேரமாக நீடித்தது)
இந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர்) பேசியதாவது:-
ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, கட்சியில் இணைவது அவரவர் விருப்பம். இதில் கருத்து சொல்ல ஏதும் இல்லை.
பழனிச்சாமி (அ.தி.மு.க)- கோம்பு பள்ளம் கான்கிரீட் தளமாக மாற்றுதல் என்ன ஆனது?
விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர் )-நகராட்சி நிர்வாக அமைச்சரால் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கோம்பு பள்ளம் முழுவதும் கான்கிரீட் தளமாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
வடிகால் அமைத்தல், சாலை பராமரிப்பு, நாய்களை கட்டுப்படுத்துதல், உரம் தயாரிக்கும் இடம் குறித்த சர்ச்சை உள்ளிட்டவைகள் குறித்து கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், சுமதி, கதிரவன் பேசினார்கள்.
இதில் நகராட்சி ஆணையாளர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu