குமாரபாளையம் நகராட்சி தினசரி சந்தை : அமைச்சர் நேரு திறப்பு..!

குமாரபாளையம் நகராட்சி  தினசரி சந்தை : அமைச்சர் நேரு திறப்பு..!
X

குமாரபாளையம் தினசரி சந்தையை அமைச்சர் நேரு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

குமாரபாளையம் தினசரி சந்தையை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தை திறப்பு விழா அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. கணேசமூர்த்தி, மாவட்ட கலெக்டர் உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் தலைமை வகிக்க, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, தினசரி சந்தையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

அமைச்சர் நேரு பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 854.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் நாமக்கல் பேருந்து நிலையம், புதிய மார்க்கெட் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்திற்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

நகரப் பகுதிகளில் பேருந்து நிலையம், குடிநீர் வசதி, சந்தை உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட நகராட்சி நிர்வாகத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் 24 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் அலுவலர்களுக்கான ஊதியம் போக 18 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காகவே செலவிடப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்படுகின்ற துறை சார்ந்த அறிவுப்புகள் 3 மாத காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளதன் அடிப்படையில், உடனடியாக அரசாணைகள் வெளிடப்பட்டு அதற்கான நிதி ஒப்பளிப்பு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.


குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 544 இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 4.50 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பெற்ற இரண்டரை ஆண்டுகளில் கூடுதலாக 3 கோடி பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 103 இடங்களில் புதிய கூட்டுகுடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நகரப்பகுதிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை நிறைவேற்றிட கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகாரட்சிகள், 490 நகராட்சிகள், 138 பேரூராட்சிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குமாரபாளையம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 278.24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தினசரி சந்தை 2 ஆயிரத்து 188 சதுர மீட்டர் பரப்பளவில், 6 நிரந்தர கடைகளும், 155 தற்காலிக கடைகளும், 1 சிற்றுண்டியகம், 1 பெண்கள் ஓய்வறை, 1 கிடங்கு, 1 பாதுகாவலர் அறை மற்றும் 2 கழிப்பறை உட்பட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கலைஞர் நகர்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 245,20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 23 எண்ணிக்கை, 1.83 கி.மீ. மண் சாலையினை தார் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி, 192.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டும் பணி, 2.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 293.00 லட்சம் மதிப்பீட்டில் 9 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 5 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, 4 பணிகள் நடைபெற்று வருகிறது. அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 31.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீர் நிலைகள் மேம்படுத்தும் பணி மற்றும் பூங்கா அமைத்தல் ஆகிய 2 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் 34.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்

3 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நுண் உரம் செயலாக்க மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 42.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பொருட்கள் மீட்பு கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் 200.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய பள்ளிபாளையம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுதல் பணி முடிக்கப்பட்டுள்ளது. மாநில நகர்புற அடிப்படை வசதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 233.17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 312 எண்ணிக்கையிலான தெரு விளக்குகளை எல்.ஈ.டி (தெரு மின் விளக்குகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கலைஞர் நகர்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 738.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி, 360.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை கட்டும் பணி, தூய்மை இந்தியா திட்டம் (நகர்புறம்) 2.0 திட்டத்தின் கீழ் ஆயிரத்து 630.00 லட்சம் மதிப்பீட்டில் 6 எம்.எல்.டி கழிவுநீர் 20 கே.எல்.டி கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. மேலும் குமாரபாளையம் நகராட்சிக்கு தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும்." இவ்வாறு அவர் பேசினார்.

இதில் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், துணை தலைவர் வெங்கடேசன், நகராட்சி நிர்வாக சேலம் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண், நகராட்சி ஆணையாளர் .சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



படவிளக்கம்


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!