குமாரபாளையம் நகராட்சியில் முறையாக வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை... ஆணையாளர் எச்சரிக்கை..

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம். (கோப்பு படம்).
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் சொத்து வரி, காலி மணை வரி, குடிநீர் உள்ளிட்ட கட்டணங்கள் ஆகியவற்றை முறையாக செலுத்தாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு வகிக்கும் கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
குமாரபாளையம் நகராட்சி முதல் நிலை நகராட்சி ஆகும். இதன் மக்கள் தொகை 79 ஆயிரத்து 410 ஆகும். நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வகையில் ஆண்டிற்கு 8.63 கோடி ரூபாய் வருவாய் வரவேண்டும். இந்த வருவாயை கொண்டுதான் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக நகராட்சிக்கு வரவேண்டிய வரியினங்கள், கட்டணங்கள், கடை வாடகை உள்ளிட்ட வசூல் ஆகாமல் இருந்து வருகிறது. இந்த வகையில் சொத்துவரி மற்றும் காலி மனைவரி ரூ. 3 கோடியே 97 லட்சமும், குடிநீர் கட்டணம் ரூ. 2 கோடியும், தொழில் வரி உள்ளிட்டவைகளும் வசூல் ஆகாமல் உள்ளது.
மேலும், நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு எடுத்தவர்கள் சிலர் 69 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தாமல் நிலுவை உள்ளது. நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய்கள் நிலுவையில் இருப்பதால் குமாரபாளையம் நகராட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ள இயலாத நிலையில் இருந்து வருகிறது.
நகராட்சி ஊழியர்கள் , தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு மாத சம்பளம் கொடுக்க இயலாத சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதேபோல் காவிரி குடிநீர் விநியோகம் செயல்படுத்துவதற்கான மின் கட்டணம் செலுத்தப்படாததால் மின் துண்டிப்பு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை முதல் அரையாண்டிற்கான தொகையினை ஏப்ரல் 15 ஆம் தேதியும், இரண்டாம் அரையாண்டிற்கான தொகையை அக்டோபர் 15 ஆம் தேதியும் வரி செலுத்துவதற்கான கடைசி நாளாகும். ஆனால் சில வரி விதிப்புதாரர்கள் சொத்துவரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 31 என தவறுதலாக நினைத்து கொண்டு வரி செலுத்தாமலும், காலம் தாழ்த்தியும் வருகிறார்கள்.
2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான சொத்துவரி செலுத்த வேண்டிய காலம் அக்டோபர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே, குமாரபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்டவற்றை உடனே செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு வரி செலுத்தாதவர்களின் பெயர்ப்பட்டியல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும். அதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து தவிர்ப்பதற்கு வரியினங்களை உடனே நகராட்சி கருவூலத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என நகராட்சி ஆணையாளர் கணேசன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu