குமாரபாளையம் நகராட்சியில் 33 கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர்மன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிட்ட நிலையில், தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9, எனும் விதத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பதவியேற்பு விழா இன்று குமாரபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் கமிஷனர் சசிகலா தலைமையில் நடைபெற்றது.
முதற்கட்டமாக 11 பேர், இரண்டாம் கட்டமாக 18பேர், மூன்றாம் கட்டமாக 4 பேர் என மூன்று கட்டங்களாக பதவியேற்றுக்கொண்டனர். மார்ச் 4ல் காலையில் நடைபெறும் நகரமன்ற தலைவர் தேர்தலிலும், மாலையில் நடைபெறவுள்ள நகரமன்ற துணை தலைவர் தேர்தலிலும் பங்கேற்க வேண்டுமாய் கமிஷனர் சசிகலா உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் 20வது வார்டில் 71 வயதில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் வள்ளியம்மாள், 4, 2 வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் புஷ்பா, கிருஷ்ணவேணி ஆகிய அக்காள், தங்கை, 29,30வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் தனலட்சுமி, பாலசுப்ரமணி ஆகிய அம்மா, மகன் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அனைத்து உறுப்பினர்களும் இறைவன் மீது ஆணையாக உறுதி ஏற்கிறோம் என சொல்லி பதவியேற்ற நிலையில், 25வது வார்டு தி.மு.க. உறுப்பினர் வெங்கடேசன் மட்டும், அண்ணா மீது ஆணையாக என்று கூறி பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பு விழாவையொட்டி சேலம் சாலை, பவானி சாலை, ராஜா வீதி, புத்தர் வீதி ஆகிய சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. அனைத்து சாலைகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்தனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் டி.எஸ்.பி. பழனிச்சாமி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.க்கள் மலர்விழி, சிவகுமார், முருகேசன், நந்தகுமார், சேகரன், சண்முகம் இளமுருகன் உள்ளிட்ட பலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu