குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)

குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையர் குமரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு, தினசரி 7.20 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, பொதுமக்கள் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 50 லிட்டர் வீதம் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நிலவி வரும் மிக கடுமையான கோடை வெப்பம் காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. எனவே, நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரை, பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் கொண்டு உறிஞ்சுவது, கண்டறியப்பட்டால், மின் மோட்டாரை பறிமுதல் செய்வதுடன், குடிநீர் உப விதிகளின்படி, அபராதம் விதிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே கோடை காலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகளை உள்ளடக்கிய 7.10 ச.கி.மீ. பரப்பளவு, 85 ஆயிரம் மக்கட்தொகை கொண்டதாகும். இங்கு 22,053 குடியிருப்புகள் உள்ளன.

குமாரபாளையம் நகராட்சியின் குடிநீர் திட்டம் காவேரி நகர் பகுதியில் இருந்து, இயல்பு நீரேற்று நிலையம் 1989ல் ஒன்றும், குடிநீர் அபிவிருத்தி திட்டம் 2001ம் ஆண்டிலும் மேற்கொள்ளப்பட்டது. இயல்பு நீரேற்று நிலையத்தில் 60:00 ஹெச்.பி. டர்பைன் மோட்டார், மற்றும் 25:00 எச்.பி. ததிறன் கொண்ட நீர் மூழ்கி மின் மோட்டோர்கள் மூலம், 7.50 எம்.எல்.டி. அளவு குடிநீர், நீரேற்றம் செய்யப்பட்டு, இடைப்பாடி சாலையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து 120 எச்.பி. மோனோ பிளாக் மோட்டார் மற்றும் 50 எச்.பி. திறன்கொண்ட நீர்மூழ்கி மின் மோட்டார் மூலம் 71.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து 8 குடிநீர் மேல்நிலை தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

ஆற்றில் நீர்வரத்து குறையும் நிலை ஏற்படுவதை கருதி கடந்த டிசம்பர் மாதம், ஆற்றில் உள்ள குடிநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது. நாளது தேதி வரை குமாரபாளையம் நகராட்சியில் 13,086 குடிநீர் கிளை இணைப்புகள் 93 பொதுக்குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்சமயம் வரவுள்ள கோடைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்படும் குறைந்தபட்ச 500 கனஅடி நீரைக்கொண்டு இந்நகரின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய போதுமானதாகும். காவிரி ஆற்றின் நீர் வரத்து, நகரில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் பெறப்படும் தண்ணீரை கொண்டு கோடைக்கால வறட்சியினை ஈடு செய்ய இயலும்.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!