நாள் முழுதும் மின் தடைக்கு கண்டனம், கையிருப்பு மின்மாற்றி வைத்திருக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!
நாள் முழுதும் மின் தடைக்கு கண்டனம், கையிருப்பு மின்மாற்றி வைத்திருக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
குமாரபாளையத்தில் நாள் முழுதும் மின் தடைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், கையிருப்பு மின்மாற்றி வைத்திருக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் சேலம் சாலை பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மின்மாற்றி நேற்றுமுன்தினம் காலை 06:00 மணியளவில் வெடித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் நிறுத்தப்பட்ட மின் விநியோகம் இரவு 10:00 மணிக்கு மேல் ஆகியும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் யூனிட், கைத்தறி கூடங்கள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், மேலும் பல வியாபார நிறுவனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இது பற்றி மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:
இந்த மின்மாற்றி இருக்கும் இடத்தில் அதிக அளவிலான கடைகள் உள்ளன. சேலம் சாலை பிரதான சாலை என்பதாலும், அருகே பஸ் ஸ்டாண்ட் இருப்பதாலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த மின்மாற்றியில் அடிக்கடி நெருப்பு பொறிகள் ஏற்படுவதுண்டு. இந்த சாலையில் டிவைடர் வைக்கப்பட்டதால், மிக குறுகிய சாலையாக உள்ளது. இதன் ஓரமாக இந்த மின்மாற்றி உள்ளதால், பேருந்து, லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்கையில், டூவீலர் கூட போக முடியாது. நடந்து செல்பவர்கள் கூட அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. அடிக்கடி இந்த இடத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு, பலரும் பாதிக்கப்பட்டதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த மின்மாற்றியை வேறு இடத்தில மாற்றியமைக்க கோரி, பல முறை மனு கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை மிகுந்த அலட்சியத்துடன் இடமாற்றம் செய்யாமல் உள்ளனர். இந்நிலையில், தற்போது மின்மாற்றி வெடித்துள்ளது. இதுவே, காலை 09:00 மணிக்கு மேல் நடந்திருந்தால், பெரும்பாலான பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். இந்த மின்மாற்றியை மாற்றியமைக்க இரவு 10:00 மணிக்கு மேல் ஆகியும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் எண்ணற்ற தொழில் நிறுவனத்தார் மிகவும் பாதிப்புக்கு ஆளாகினர். வெடித்த மின்மாற்றிக்கு பதிலாக, நாமக்கல்லிலிருந்து வேறு மின்மாற்றி எடுத்து வந்து, பணிகள் முடிக்க இரவு வரை பணி நீடித்தது. குமாரபாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் கையிருப்பு மின்மாற்றி வைத்திருந்தால் , இது போல் அதிக நேரம், மின் நிறுத்தம் செய்யவேண்டி இருந்திருக்காது. தொழில் செய்வோரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். இனியாவது கையிருப்பு மின்மாற்றி வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே இந்த மின் மாற்றியை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
படவிளக்கம் :
குமாரபாளையம் சேலம் சாலையில் பழுதான மின்மாற்றி .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu