ஜன. 18 ஜல்லிக்கட்டுக்கு குமாரபாளையத்தில் கால்கோள் விழா
குமாரபாளையத்தில் ஜன. 18ல் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு கால்கோள் விழா நடைபெற்றது.
குமாரபாளையத்தில் ஜன. 18ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் கால்கோள் விழா நடைபெற்றது. குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் தலைமை வகித்தார். தி.மு.க. ஒன்றிய செயலர் யுவராஜ், நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் விழாவை துவக்கி வைத்தனர்.
இது பற்றி வினோத்குமார் கூறியதாவது: குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வரும் ஜனவரி மாதத்தில் 6வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டி ஜன. 18ல் நடைபெறவுள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பதுடன் , 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, வெப்படை, சேலம், ஓமலூர், பவானி, அந்தியூர், ஈரோடு உள்ளிட்ட பகுதியிலும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருவது மிகுந்த மன நிறைவை தருவதாக உள்ளது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர். காளைகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
விழாக்குழு தலைவர் சுகுமார், தொழிலதிபர்கள் விஜய்கண்ணன், ராஜாராம், பா.ம.க. மாவட்ட செயலர் வேல்முருகன், குப்பாண்டபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பரசு, ஒ.ஆர்.எஸ். எனப்படும் செல்வராஜ், ரவி, ராஜ்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை செயலர் கதிரவன்சேகர், பேரவை நிர்வாகிகள் ராஜ்குமார், புவனேஸ்வரன், சுசிகுமார், விடியல் பிரகாஷ், மாதேஸ், தீபன், சதீஷ், பாலாஜி, பூபதி, உதயா உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu