உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் குமாரபாளையம் மருத்துவ மாணவர்
உக்ரைன் நாட்டில் தவித்து வரும் குமாரபாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சூர்யா.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், வட்டமலை பகுதியில் ஓட்டல் கடை வைத்து தொழில் செய்து வருபவர் இளங்கோ, 43. இவரது மனைவி இளவரசி, 38. இவர்களுக்கு சூர்யா, 21, என்ற மகன், தர்சினி, 15, என்ற மகள் உள்ளனர். தர்சினி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சூர்யா உக்ரைன் நாட்டில் DNIPROPETROVSK மெடிக்கல் அகாடமி என்ற மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது போர் நடந்து வரும் நிலையில் சூர்யா மற்றும்தமிழகத்தை சேர்ந்த 7 மாணவர்கள் இந்தியா வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மாணவரின் தந்தை இளங்கோ கூறுகையில், எங்கள் மகன் உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். போர் அறிவிப்பு வெளியானதும் உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை உடனே இந்தியா வர அழைத்தனர்.
எங்கள் மகன் உள்பட பலரும் இந்தியா வர ஆயத்தமாகினர். வழக்கமாக 30 ஆயிரம் என்று இருக்கும் விமான கட்டணம், 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக சூர்யா கூறினான். உடனே தொகையை அனுப்பி வைத்தேன். 24ம் தேதி டிக்கெட் கிடைப்பதாக இருந்தது. ஒரே நேரத்தில் அதிகம் பேர் திரண்டதால் 25ம் தேதிக்கு டிக்கெட் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், 25ம் தேதி போர் பதற்றம் அதிகரித்ததால், விமான சேவை நிறுத்தப்பட்டதாகவும், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் வீட்டிற்குள் அனைவரும் முடங்கி உள்ளனர். இன்று (நேற்று) நாமக்கல் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து, மகனை மீட்க நடவடிக்கை எடுக்க கேட்டுகொண்டோம். அவரும் கனிவுடன் கேட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். மகன் எங்களுடன் வந்து சேரும் வரை நிம்மதி இருக்காது. உறக்கம் வராது என அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu