குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் நடந்த உயர்கல்வி ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் உமா பேசினார்.
குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் நடந்த உயர்கல்வி ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி கலையரங்கில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் உமா பேசியதாவது:-
விழுதுகளை வேர்களாக்க என்ற தலைப்பின் கீழ், தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தன்னார்வ இயக்கம் இணைந்து நடத்தக்கூடிய மாணக்கர்களுக்கான உயர்கல்வி மற்றும் அவர்களுடைய வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சி நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் நேரத்தில் நோக்கங்களும், வழித்தடங்களும் அதிகம் இல்லை. இந்த தொழில்நுட்ப காலத்தில் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக அனைத்து தகவல்களும், புள்ளி விவரங்களும் உடனுக்குடன் கிடைக்கின்றன. முன்பு ஒரு போட்டித் தேர்வில் தயார் செய்வதற்காக அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று அதற்கான புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும். குறிப்புகள் எடுக்க வேண்டும். தற்போது உள்ள தொழில்நுட்ப காலத்தில் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த வழிகாட்டு நிகழ்ச்சியினை அனைத்து மாணவ, மாணவிகளும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவிகள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் முழு கவனத்தை செலுத்தி முழு உழைப்பை கொடுத்து படிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் இந்த உலகத்தில் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. இதில் சிறந்ததை தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான பாதைக்கு செல்லக் கூடாது. கண்டிப்பாக உங்கள் அனைவராலும் நம் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும், முன்னோடி மாநிலமாகவும் திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் களங்காணி ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளிட்ட பள்ளி மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். குமாரபாளையம் பி.எட். கல்லூரி முதல்வர் ஜான்பீட்டர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேலு, உயர்கல்வி வழிகாட்டு பயிற்றுநர் சுனில்குமார், போட்டித்தேர்வு பயிற்சியாளர் கண்ணன், மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu