குமாரபாளையம் கிரைம் செய்திகள்..!

குமாரபாளையம் கிரைம் செய்திகள்..!
X

குமாரபாளையம்    க்ரைம் செய்திகள்  (பைல் படம்).

நேற்றும் இன்றும் குமாரபாளையம் பகுதியில் நடந்த கிரைம் செய்திகளை பார்ப்போம் வாங்க.

குமாரபாளையம் கிரைம் செய்திகள்

அனுமதி இல்லாமல் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் பகுதியில் அனுமதியில்லாமல் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. சந்தியா தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் ஒருவர் புகையிலைப் பொருட்கள் விற்றுக்கொண்டிருந்தார். கையும் களவுமாக பிடித்த குமாரபாளையம் போலீசார், அவரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் பெயர் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், 47, என்பது தெரியவந்தது. இதே போல் உழவர் சந்தை அருகே ஒருவர் புகையிலை பொருட்கள் விற்றுக்கொண்டு இருந்தார். போலீஸ் விசாரணையில் அவர் பெயர் கிருஷ்ணன், 61, என்பது தெரியவந்தது. இருவரிடமும் தலா ஐந்து புகையிலை பொருட்கள் கொண்ட பாக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

_________________________________________________________

பெண்களை ஆபாசமாக சித்தரித்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டி ஊர் பொதுமக்கள் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீ. மேட்டூர் பகுதியில் வசிப்பவர் முருகேசன், 32. தனியார் நிதி நிறுவன பணியாளர். இவர் அவரது கிராமத்து பெண்கள் பலரை போட்டோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் ஆபாசமாக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா, 32, என்பவர் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் தவமணி, முருகேசன் என்பவரை கைது செய்தார். வீ.மேட்டூர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு, குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்ஸ்பெக்டர் தவமணி நேரில் வந்து, சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்துள்ளேன், என்றார்.

_____________________________________________________

குமாரபாளையத்தில் பெண் தொழிலாளி பணி செய்யும் போது மயங்கி விழுந்து பலியானார்.

குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் மணி, 61. தனியார் விசைத்தறி பட்டறை கூலித் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் காலை 11:30 மணியளவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, மயங்கி விழுந்தார். பட்டறை உரிமையாளர், இவரது கணவர் சண்முகத்திற்கு தகவல் தெரிவிக்க, நேரில் வந்த சண்முகம் , அவரை சிகிச்சைக்காக ஈரோடு ஜி.ஹெச்.க்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றார். இவரை பரிசோதித்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

________________________________________________________

பள்ளிபாளையம் அருகே வாய்த்தகராறில் அரிவாள் வெட்டு விழுந்தது.

மொளசி அருகே கோரைக்குட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்குமார், 20. பெயிண்டர். இவரது உறவினர் சுரேஷ்குமார், 28. ஆடி 18 பண்டிகைக்கு அப்பா ராஜூ மற்றும் பாட்டியை பார்க்க மும்பையில் இருந்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில், தனக்கு பெண் பார்த்து தரச் சொல்லி, அருள்குமாரிடம், சுரேஷ்குமார் கேட்டார். நான் என்ன மாமா வேலையா பார்க்கிறேன், என்று அருள்குமார் கூறியதாக தெரிகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த அரிவாளை எடுத்து, அருள்குமார் தலையில் சுரேஷ்குமார், வெட்ட, அருள்குமார் பலத்த காயமடைந்தார்.

இது குறித்து வழக்குபதிவு செய்த மொளசி போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்