குமாரபாளையம் பேருந்து நிலைய கடையினர் நகராட்சி சேர்மனிடம் மனு
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கடையினர் நகராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மனிடம் மனு கொடுத்தனர்.
குமாரபாளையம் பாலக்கரை, சின்னப்பநாயக்கன்பாளையம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பலர் பல தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்களில் பலர் 10,8 என பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதனை தீவிரப்படுத்த நகராட்சி கடைகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று வாடகை நிலுவை தொகை முழுதும் செலுத்தப்பட வேண்டும், இல்லையேல் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பஸ் நிலைய சில்லறை வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் விஜய் கண்ணன், துணை சேர்மன் வெங்கடேசனை சந்தித்து மரியாதையை நிமித்தமாக சால்வை அணிவித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் நகராட்சி கடை வாடகை தர சில மாதங்கள் அவகாசம் கேட்டிருந்தனர்.
இதுகுறித்து சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், குமாரபாளையம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டில் 40 கடைகள் உள்ளன. கொரோனா காலத்தில் பஸ் ஸ்டாண்டில் மார்க்கெட் அமைத்ததால் வியாபாரம் செய்ய கடைகள் திறக்க முடியவில்லை. இதனால் வாடகை நிலுவை ஏற்பட்டது.
புதிய கமிஷனர் வந்த பின் வாடகை செலுத்த கூறியபோது, இது பற்றி சொன்னதும் 2 மாதம் தள்ளுபடி செய்தார்கள். அதன் பின் நிலுவை வாடகையில் 50 சதவீதம் செலுத்தினோம். பஸ் ஸ்டாண்டிற்கு பல தனியார் மற்றும் அரசு பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வருவதில்லை. இரவு நேர பஸ்கள் இரவு 08:00 மணிக்கு மேல் வருவதில்லை. சேலம், ஈரோடு, இடைப்பாடி செல்லும் பஸ்கள் மட்டுமே குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வருகிறது. திருச்சி, கோவை, உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வருவதில்லை. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சமூக விரோதிகளால் பாலியல், கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத சம்பவங்கள் நடந்து வருவதால் புறக்காவல் நிலையம் அமைக்க கேட்டதற்கு, அதற்கான தகர பெட்டி மட்டும் வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஒரு நாள் கூட போலீஸ் வந்து உட்காரவில்லை.
மேலும் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பஸ் ஸ்டாண்டில் படுத்து விடுகின்றனர். கடையினர் வந்து கடை திறக்கும் வரை தூங்கும் இவர்களை எழுப்பினால் தகாத வார்த்தை பேசுவதுடன் கடை உரிமையாளர் மீது எச்சில் துப்பிய சம்பவமும் நடந்துள்ளது. இவ்வளவு சிரமங்களுக்கிடையில் தற்போது வாடகை செலுத்தாவிட்டால் கடைகள் சீல் வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறி சென்றனர். இது சம்பந்தமாக சேர்மன், துணை சேர்மனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அவர்களும் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு சொல்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu