குமாரபாளையம்; மகளிர் குழுவினருக்கு விருது

குமாரபாளையத்தில் ஆற்றல் அமைப்பின் சார்பில் மகளிர் குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஆற்றல் பொதுநல அமைப்பின் சார்பில் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 148 சுய உதவி குழு சேர்ந்த பெண்களுக்கு வீரமங்கை வேலுநாச்சியார் விருது வழங்கும் விழா அமைப்பாளர் அசோக்குமார் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் நிறுவனர் அசோக்குமார் பேசியதாவது:
சமுதாயத்தில் தனித்தன்மையோடு வாழ வேண்டும் என்ற நோக்கில், தங்களை மேம்படுத்திக் கொண்டு, பிறரையும் பொருளாதாரம் ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பெண்களால் சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறப்புமிக்க சுய உதவி குழு பெண்களை கௌரவிக்க வேண்டும் என்று ஆற்றல் அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு முதல் வீரமங்கை வேலு நாச்சியார் விருது வழங்குகிறோம்.
குமாரபாளையம் நகரம்மற்றும் புறநகர் பகுதியில் உள்ள 148 சுய உதவி குழுக்கள் தேர்வு செய்துள்ளோம். இந்த குழுக்களில் சிறப்பாக சமுதாயத்திற்காக பாடுபடும் சுய உதவிக் குழு சார்ந்த ஆயிரத்து 850 பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுக்களுக்கும் சிறப்பு பரிசுகளும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி உள்ளோம். தங்களையும் சமுதாயத்தையும் பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தி உள்ள சுய உதவி குழுக்களின் பணியை பாராட்டி கௌரவிக்க வேண்டியது நம் பணி. ஒவ்வொரு குழுக்களும் ஒவ்வொரு விஷயங்களில் தனித்தனிமை பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு பெண்மணியும் தன்னம்பிக்கை பெற்றதோடு பொதுமக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி வருகின்றனர் .
ஆற்றல் அமைப்பின் சார்பில் முதன்முதலாக வீரமங்கை வேலு நாச்சியார் விருதினை குமாரபாளையம் பகுதியை சுற்றியுள்ள பெண்களுக்கு வழங்கியதோடு தொடர்ந்து இந்த குழுவில் உள்ள மகளிர் அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சிகளை பெறுவதற்கு ஆலோசனைகளை ஆற்றல் சார்பில் வழங்கும் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் பெரும் சமுதாய மேம்பாடு உருவாக்கப்படும். தொடர்ந்து ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள சுய உதவி குழு சார்ந்த பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆற்றல் அறக்கட்டளை கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு சமுதாயப் பணிகள், அரசு பள்ளிகளை மேம்படுத்துவது, சமுதாயக்கூடங்கள் கட்டித் தருவது, பழமையான சிதிலடைந்த கோவில்களை புணரமைத்து கொடுப்பது, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் கௌரவிப்பது, உள்ளிட்ட பணிகளோடு பத்து ரூபாய் செலவில் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளும் தரமான, உணவு வழங்கி வருகிறார்கள். 10 ரூபாய் செலவில் 18 விதமான நோய்களுக்கு பரிசோதனை செய்து தேவையானவர்களுக்கு இலவசமாக மருந்தும் வழங்கி வருகிறார்கள். ஆற்றல் மருத்துவமனை சேவையும் பொதுமக்களின் வரவேற்பை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu