குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதி க்ரைம் செய்திகள்..
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் பகுதியில் நிகழ்ந்த க்ரைம் செய்திகள் பற்றிய விவரம் வருமாறு:
பிளஸ் 2 மாணவி தற்கொலை:
பள்ளிபாளையம், குட்டமுக்கு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். தச்சு தொழிலாளி. இவரது மகள் மகாலட்சுமி (வயது 17). அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மாணவி மகாலட்சுமி தினமும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்று விட்டு, மாலை 5 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில், வேலை முடிந்து மாணிக்கம் இரவு 7 மணியளவில் வீடு திரும்பினாராம். ஓடு போடப்பட்ட அந்த வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் மகாலட்சுமி தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதையெடுத்து, அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து மகாலட்சுமியின் உடலை கீழே இறக்கினர். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மாணவி மகாலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார். மாணவி மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து பள்ளிபாளையம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
வாகனம் மோதி தொழிலாளி பலி:
பள்ளிபாளையம் அருகே வெப்படையை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 35) கட்டிட கூலித் தொழிலாளி. இவர் மக்கிரிபாளையம் பிரிவில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. பலத்த காயமடைந்த காளியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளியப்பன் இறந்தார். இது குறித்து வெப்படை போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இளம் பெண் மாயம்:
தஞ்சாவூரை சேர்ந்தவர் கோகிலா (வயது 19). பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அவர் நூற்பாலை வளாகத்தில் உள்ள அறையில் தங்கி இருந்தார். நவம்பர் 19 ஆம் தேதி முதல் கோகிலாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கோகிலா கிடைக்காததால் அவரது சகோதரர் விக்னேஷ், வெப்படை போலீசில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
மாணவி படுகாயம்:
குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலையில் தனியார் கல்லூரியின் எதிரே கல்லூரியின் விடுதி உள்ளது. ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு மாணவ, மாணவியர் திரும்ப வந்து கொண்டிருந்தனர். சேலம் கோவை புறவழிச்சாலையை கடந்து செல்லும் போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று மாணவ, மாணவிகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி கவுசல்யா, மாணவர்கள் ஆஷிக்குமார், தியானேஸ்வரன், மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சிவா உள்ளிட்ட நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். அந்த வழியே சென்ற பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்த குமாரபாளையம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu