குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
சிறுநீரகம் விற்பனை (கோப்பு படம்)
பள்ளிபாளையத்தில் மீண்டும் விசைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பள்ளிபாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக கடன், வறுமை ,குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழிலாளர்கள் சிறுநீரகம் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலம்பாளையம் பேரூராட்சி மன்ற ஆறாவது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் இதுகுறித்து தமிழக முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பி இருந்தார். இதனை அடுத்து திருச்செங்கோடு டி.எஸ்.பி இமயவரம்பன், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் புகார் அளித்த பாலசுப்பிரமணியம் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை செய்யும் சிறுநீரக இடைத்தரகர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது சம்பந்தப்பட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையத்தில் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்பனை நடைபெறுவதாக தமிழகம் முழுவதும் பாரும் பரபரப்பு ஏற்பட்டு, ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் சிறுநீரகம் விற்பனை தொடர்பான புகார்கள் எழுந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் தொடரும் இந்த சிறுநீரக விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu