குமாரபாளையத்தில் கால பைரவர் சிறப்பு வழிபாடு

குமாரபாளையத்தில் கால பைரவர் சிறப்பு வழிபாடு
X

தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையத்தில் கால பைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கும், காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கிராமத்து தெய்வ வழிபாடு குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:

நாட்டுப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். இத்தெய்வங்களின் வரலாறு மக்களால் நன்கு அறியப்பட்டவையே. இத்தெய்வங்களின் தோற்றங்களுக்குப் பல வாய்மொழிக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இத்தெய்வங்கள் மக்களுள் மக்களாக வாழ்ந்து, தானாகவோ, ஊர் நன்மைக்காகவோ அல்லது குறிப்பிட்ட சிலரால் வன்கொலை செய்யப்பட்டோ உயிரிழந்தவர்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண் தெய்வங்கள் கொல்லப்பட்டு இறந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் இத்தெய்வங்களே காரணம் என்று நம்பினர். எனவே அவற்றுக்கு வழிபாடுகள் செய்து மக்கள் தெய்வங்களாக வணங்கினர். அவ்வாறு வணங்கப் பெறும் தெய்வங்களுள் பெரும்பான்மை பெண் தெய்வங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பெண் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பலநிலைகளில் வணங்கப்படுகின்றன. இப் பெண் தெய்வங்கள் அம்மன் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இத்தனை பெண் தெய்வங்கள்தான் என்று எண்ணிக்கையில் சொல்லமுடியாத அளவுக்கு பெண் தெய்வங்கள் சமூகத்தில் வழிபடப்பட்டு வருகின்றன.

நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், நீர்நிலைகளுக்கு அருகில் உறைவதாக நம்பினர். முறையான கோயில் அமைப்போ, சிலை வடிவமோ இல்லாமல், சாதாரணமாக ஒரு கல்லிலோ அல்லது மரத்திலோகூட தெய்வம் உறைவதாக மக்கள் நம்புகின்றனர்.

இத்தெய்வங்களுக்கு விரதமிருந்தும், உயிர்பலி கொடுத்தும் வழிபாடு செய்யப்படுகின்றது. இவை மட்டுமல்லாமல் வேண்டுதல், நேர்த்திக்கடன், தீமிதித்தல், தேர் இழுத்தல் போன்றனவும் வழிபாட்டு நிலையில் அடங்கும். பெருந்தெய்வங்களைப் போல தினசரி பூசைகளோ, படையல்களோ இத்தெய்வங்களுக்குச் செய்வதில்லை

நாட்டுப்புறத் தெய்வங்கள் பரவலாக எல்லோராலும் வணங்கப்படுகின்றன. பொதுவாக இத்தெய்வங்கள் குறிப்பிட்ட இனம், சாதி, ஊர் என்றில்லாமல் அனைவராலும் வணங்கப்படுகிறது. அதே போல் ஒரே தெய்வம் குலதெய்வமாகவும், இனத் தெய்வமாகவும், ஊர்த் தெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகின்றன.

பெரும்பாலும் பிராமணரல்லாத பூசாரிகள் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்வர். தற்போது ஆரியப் பண்பாட்டாதிக்கத்தின் விளைவாக மேநிலையாக்கம் பெற்று பிராமணப் பூசாரிகள் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்து வருகின்றனர்.

பெரும்பாலும் அருள்வாக்கு கேட்டு தெய்வத்தின் சம்மதத்துடனே திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்பட்டு வழிபாடுகளும், பூசைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story