பள்ளிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 500 காளைகள் பங்கேற்பு

பள்ளிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 500 காளைகள் பங்கேற்பு
X

பள்ளிபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.

பள்ளிபாளையத்தில் முதன்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் பங்கேற்றன.

பள்ளிபாளையத்தில் ஐந்துபனை பகுதியில் பள்ளிபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் சி.கே. சரஸ்வதி, மாநில விவசாய அணி செயலர் நாகராஜ் ஆகியோர் கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தனர்.


மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி, மாநில பொது செயலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வாழ்த்தி பேசி, வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளை விடப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு காளையாக விடப்பட்டது. இதனை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்க சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருந்தன.

இதில் 500 காளைகள் பங்கேற்றதுடன், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாட்டினை பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி, தங்க நாணயம், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story