குமாரபாளையத்தில் ஒரே நாளில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து தீ விபத்து

குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் கள்ளிபாளையம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
குமாரபாளையத்தில் ஒரே நாளில் மூன்று இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் கள்ளிபாளையம் பகுதியில் வசிப்பவர் முருகாண்டி(வயது 42. ).இவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பழைய இரும்பு, பழைய பேப்பர்கள் விற்பனை செய்யும் வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, நேரில் வந்த தீயணைப்பு படையினர் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
குமாரபாளையம் தாலுகா அலுவலகம் அருகே கருமாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பூபதி ராஜா. கூலிதொழிலாளி. வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில், திடீரென்று இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த துணிமணிகள், பாத்திரங்கள், டி.வி., மின் விசிறி உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து சேதமாகின. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேறு ஒரு இடத்தில் நடந்த தீயை அணைக்க சென்று வருவதற்குள், அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயை அணைத்தனர். மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி மகன் தரணிதரன், நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி, முன்னாள் கவுன்சிலர் சிங்காரவேல் உள்ளிட்ட பலர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அரிசி, பருப்பு, உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.
இதே போல் நேற்று இரவு 08:30 மணியளவில் குமாரபாளையம் சேலம், கோவை புறவழிச் சாலை, டீச்சர்ஸ் காலனி சர்வீஸ் சாலை பகுதியில் யாரோ சிலர் பழைய பஞ்சு கழிவு மூட்டைகள் போட்டு சென்றுள்ளனர். இதில் அவ்வழியே வந்த யாரோ ஒருவர் புகை பிடிக்கும் போது, தீக்குச்சியை போட்டு விட்டு போனதாக கூறப்படுகிறது. இதனால் தீ மளமளவென பரவி அருகில் இருக்கும் மரங்களுக்கும் பரவியது. இந்த இடம் அருகில் இருக்கும் குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர நேரில் வந்த அவர்கள் தீயை அணைத்தனர்.
இந்த மூன்று சம்பவங்களில் வளையக்காரனூர் கள்ளிபாளையம் பகுதி தீ விபத்து குறித்து தேவூர் போலீசாரும், மற்ற இரண்டு சம்பவங்கள் குறித்து குமாரபாளையம் போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu