ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் தி.மு.க. வெல்லும் என்பது தி.மு.க.வினர் கனவு
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் தி.மு.க. வெல்லும் என்பது தி.மு.க.வினர் கனவு
உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைப்பதும் அதனால்தான் முன்னாள் அமைச்சர் தங்கமணி காட்டமான பேச்சு
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் தி.மு.க. வெல்லும் என்பது தி.மு.க.வினர் கனவு என்றும், உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைப்பதும் அதனால்தான் என்றும் குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி காட்டமான பேசினார்.
குமாரபாளையம் அருகே அ.தி.மு.க. வடக்கு ஒன்றியம், படைவீடு பேரூர் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன், தெற்கு ஒன்றிய செயலர் செந்தில் தலைமையில் நடந்தது. இதில் நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி பேசியதாவது:
கிராமங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம், தற்போது உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் கிராமங்களை நகரத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவர்கள் பதவி காலம் முடிந்தவுடன் சிறப்பு அலுவலர்களை நியமித்து, அதிகாரிகள் மூலம் கிராமங்களை நகரங்களுடன் இணைத்து வரி வசூல்களை பெருக்கி விடுவதற்காகவும், தி.மு.க ஆளுங்கட்சியாக இருப்பதால் நகரத்தில் இணைக்கும் போது, ஆளும் கட்சியின் சின்னத்தை வைத்து எளிதாக வெற்றி பெற முடியும் என்ற நோக்கில் தி.மு.க.வினர் கனவு கண்டு வருகிறார்கள். ஊராட்சி பகுதிகளை தி.மு.க.வின் கோட்டையாக்கி விடலாம் என்று எண்ணி உள்ளனர். அப்படி சேர்ந்தால் நூறு ரூபாய் வரி செலுத்திய இடத்தில் இரண்டாயிரம் ரூபாய் வரி செலுத்தும் நிலை உருவாகும். சொத்து வரி உயரும். இந்த இரண்டு காரணத்தினால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து சாலைகளும் தார் சாலைகளாக மாற்றி காட்டினோம். அனைத்து பகுதிக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்திரவின் பேரில், 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இப்போது மேட்டூரில் இருந்து, குமாரபாளையம் அருகே உள்ள ஊராட்சி பகுதிகள், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைத்து வருகிறது.
பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் எளிதில் கிடைக்கிறது. மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து 69 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். 50 பேர் கண் பார்வை இழந்தனர். மேலும் கஞ்சா எல்லா இடங்களில் எளிதில் கிடைத்து வருகிறது. கஞ்சா போட்ட இளைஞர், போலீசாரை அடிக்கிறான். இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 2026ல் அ.தி.மு.க. வெற்றி பெற்று விட்டால், இனி தி.மு.க.விற்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை. வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணியை கவனமாக பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, நிர்வாகிகள் சேகர், வெள்ளிங்கிரி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu