சாலைகள் மற்றும் பாலங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு
குமாரபாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு செய்தனர்.
தமிழக முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், திருச்செங்கோடு, ராசிபுரம், மல்லியகரை, ஈரோடு சாலைகள், மூன்று வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றிய பணிகள், குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் செல்லும் சாலை இரு வழிச்சாலையிலிருந்து மூன்று வழிச்சாலையாக மாற்றம் செய்த பணிகள் குறித்து, சேலம் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பவானி, குமாரபாளையம் பழைய மற்றும் புதிய காவேரி பாலங்களை ஆய்வு செய்து, அவைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய சில பணிகள் குறித்து அறிவுறுத்தினார். திருச்செங்கோடு உதவி கோட்டப் பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர்கள் சையத் ரஹீம், மோகன்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதால், அதனை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிப்பது சம்பந்தமாக ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் காமராஜ் தலைமையில் நடந்தது.
இது பற்றி பணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் காமராஜ் கூறுகையில், குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்து, பலர் கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது மேம்பாலம் கட்டுமான பணிகள் இப்பகுதியில் நடப்பதால், வாகனங்கள் யாவும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த சர்வீஸ் சாலையில் விஜயநகர் காலனி, வட்டமலை, எதிர்மேடு, வளையக்காரனூர், டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சர்வீஸ் சாலையைத்தான் பயன்படுத்தி வந்தனர். ஆனால் வாகனங்கள் அதிக அளவில் வருவதால், கத்தேரி கிராம நுழைவுப்பகுதியிலிருந்து, குமாரபாளையம் நுழைவுப்பகுதி வரை எதிர் திசையில்தான் வாகனங்கள் வரவேண்டியுள்ளது.
எந்நேரமும் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மிகுந்த அச்சத்துடன் தான் இந்த பகுதி மக்கள் இந்த சாலையை கடந்து வந்து கொண்டுள்ளனர். பொதுமக்கள் அச்சம் போக்க இந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் இந்த பகுதி மக்கள் சார்பில் மனு கொடுக்க உள்ளோம் என்று கூறினார்.
கத்தேரி பிரிவு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும், பிளக்ஸ், கொடிக்கம்பங்கள், கடைகள் அகற்ற வேண்டும், இதே பகுதியில் விளையாட்டு பயிற்சி மைதானம் அமைக்க வேண்டும், அதிக மக்கள் இந்த பகுதியில் பேருந்தில் ஏறியும், இறங்கியும் வருவதால் , இங்கு பொது சுகாதார கழிப்பிடம் அமைக்க வேண்டும், ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலைத்துறை தாமதம் செய்தால், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சமூக ஆர்வலர் சித்ரா, திருநாவுக்கரசு, செல்லமுத்து, பூபதி, பூதப்பன், மாதேஸ்வரன் உள்பட மேற்படி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu