குமாரபாளையம் பகுதியில் பலத்த மழை:ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதிப்பு
பலத்த மழையால் குமாரபாளையத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றகாட்சி.
குமாரபாளையத்தில் நேற்று பகலில் மேகமூட்டமாகவும், குளிர்ச்சியான சூழலும் இருந்தது. இந்த நிலையில் மாலை 3 மணிக்கு மழை தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. தீபாவளிக்கு பிறகு தற்போதுதான் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்துவருகிறது. இந்த நிலையில் மழையால் சாலையோர வியாபாரிகள் உள்பட பலரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மேகம் சூழ்ந்து இருட்டாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பகலிலேயே தங்களது வாகனத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
குமாரபாளையத்தில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில், கோம்பு பள்ளத்தில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. கோம்பு பள்ளத்தின் ஒரு பகுதி கழிவுநீர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே ஓடி வருகிறது. கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியதால், பள்ளி வளாகத்தில் மழை நீர் புகுந்து குளமாய் தேங்கி நின்றது. சில நாட்கள் முன்பு இதே போல் மழை நீர் தேங்கியதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் கோம்பு பள்ளத்தினையொட்டிய சுவற்றின் உயரம் அதிகப்படுத்தி, பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் புக முடியாதபடி செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கத்தேரி சமத்துவபுரம் பகுதியில் மழை நீர் புகுந்து, வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் சென்று 35 நபர்களை மீட்டனர்.
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் ஏரி நேற்றுமுன்தினம் பெய்த மழையில் நிரம்பி உபரி நீர் கம்பன் நகர், பெரியார் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முருங்கைக்காடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் வீடுகளில் புகுந்தது. பெண்கள் பள்ளியில் நீர் புகுந்து வளாகம் முழுதும் நீரால் நிறைந்ததால் பள்ளிக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. 45க்கும் மேலான வீடுகளுக்குள் புகுந்த நீர் நகராட்சி லாரி மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. கோம்பு பள்ளத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடியதில் தம்மண்ணன் சாலை முன்னாள் சேர்மன் தனசேகரன் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் தண்ணீர் புகுந்து, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் சேதமாகின. தி.மு.க. அலுவலகம் அருகே உள்ள சிறிய பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாசுகி நகர் ஒன்றிய பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பள்ளி குழந்தைகள் யாரும் அப்போது இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் யுவராஜ், 45. இவர் 10 விசைத்தறிகள் வைத்துக்கொண்டு ஜவுளி உற்பத்தி தொழில் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்றனர். தொடர்மழை பெய்து கொண்டிருந்ததால், இவரது விசைத்தறி கூடம் சுவர் மண்ணால் ஆனது என்பதால், மழை நீரில் ஊறிய நிலையில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் விசைத்தறிகள், மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் சேதமடைந்தன. ஆட்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.
குமாரபாளையத்தில் நேற்று மாலை மழையுடன் பலத்த காற்றும் வீசியதால், விட்டலபுரி பகுதியில் மரம் ஒன்று ஆறுமுகம் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த நகராட்சி நிர்வாகத்தினர், தீயணைப்பு துறையினர் நேரில் வந்து சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu