ஆதரவற்றோர் மையம் நடத்தி வரும் கூலித் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கியவர்!
படவிளக்கம் : குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளியாக வாழ்வை தொடங்கிய குமார் பாசம் ஆதரவற்றோர் மையம் நடத்தி வருகிறார்.
குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய ஒருவர் ஆதரவற்றோர் மையம் நடத்தி வருகிறார்.
இது பற்றி நிறுவனர் குமார் கூறியதாவது:
எனது பெற்றோர் ரத்தினம், மாதம்மாள். அப்பா சில ஆண்டுகள் முன் இறந்து விட்டார். எங்கள் குடும்பம் வறுமை காரணமாக, எனது அத்தை, மாமாவான சகுந்தலா, ராமலிங்கம் என்னை 6வது வரை படிக்க வைத்தார்கள். அதற்கு மேல் அவர்களால் படிக்க வைக்க முடியவில்லை. குமாரபாளையம் பகுதி விசைத்தறி மிகுந்த பகுதி. விசைத்தறி கூலி வேலை தான் செய்து வந்தேன். அதன் பின் ஒலிபெருக்கி கடையில் பணியில் சேர்ந்தேன். என் பெற்றோர், என் தாத்தா உள்ளிட்ட முன்னோர்கள் மிகவும் வறுமையில் வாடி, நல்ல உணவு கூட சாப்பிட முடியாமல் வாழ்ந்து, இறைவனடி சேர்ந்தனர். இதனால் இப்படிப்பட்ட முதியோர்களை ஆதரித்து, வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இதனை என் மனைவி தீபா வசம் கூறினேன். அவரும் இதற்கு சம்மதித்து, வெளியில் கடன் வாங்கி கொடுத்து, முதியோர் இல்லம் தொடங்க உதவி செய்தார். முன்னோர்கள் ஆசியால், எனது தொழில் அனுபவத்தால் ஒலி பெருக்கி கடை வைத்து சொந்த தொழில் செய்து வருகிறேன்.
முதலில் ஒருவர், அடுத்து, 2,3,5,7,10 என்றாகி தற்போது 35 பேர் உள்ளனர். அனைவருக்கும் 3 வேளை உணவு, உடை, மருத்துவ உதவி என என்னால் முடிந்தவைகளை கொடுத்து வருகிறேன். பலர் பல சூழ்நிலைகளில் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் வெளியேற்றப்பட்டு, மனதிற்கு அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் இங்கு வந்துள்ளனர். நான் அவர்களை கவனித்து கொள்கிறேன் என்பதை விட என்னை அவர்கள் மகன் போல் கவனித்து கொள்கிறார்கள். நல்ல மனம் படைத்த பலர் திருமண நாள், பிறந்த நாள், திருவிழா, வீட்டு திருமணம், உள்ளிட்ட பல விஷேச நிகழ்வுகளின் காரணமாக எங்கள் மையத்திற்கு உணவு வழங்கி வருகிறார்கள். அரசியல் கட்சியினர் மற்றும் சேவை சங்கத்தார் பல குழுவினர் சேவை மனப்பான்மையால் இங்கு உணவு கிடைத்து வருகிறது. கட்டில், தலையணை, பெட்சீட், பேன், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை தாராளமாக செய்து வருகிறார்கள். நல்லது செய்தால் ஆண்டவன் துணை நிற்பான் என்பது போல் ஆண்டவன் துணையால் இந்த மையம் இனிதே செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அரசு அனுமதியும் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu