கஞ்சா விற்ற நால்வர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்
குமாரபாளையத்தில் கஞ்சா விற்ற நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ. க்கள் குணசேகரன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, காவேரி நகர் புதிய காவிரி பாலம் அடியில் ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, நான்கு நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மூவாயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், குமாரபாளையம் கவுதம்ராஜ், (31), குப்புராஜ், (31), சரவணன், (39), வீரமணி, (32), என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. சந்தியா, உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பள்ளிபாளையம் பிரிவு அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த கந்தசாமி, (70), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து புகையிலை பொருட்கள் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், (60). முன்னாள் மின் வாரிய ஊழியர். இவரது மனைவி பிரபாவதி, (51). மேட்டூர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். ரவிச்சந்திரன் பல ஆண்டுகளாக மனைவியை பிரிந்து பல பெண்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை பிரபாவதியின் அக்கா தேவி போன் செய்து, குமாரபாளையம், எதிர்மேடு, பாரதி நகர் பகுதியில் உள்ள செல்வி என்பவர் வீட்டில், ரவிச்சந்திரன் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். இது பற்றி தகவலறிந்த பிரபாவதி, உறவினர்களுடன் நேரில் சென்று பார்த்த போது, செல்வி என்பவர் வீட்டில் தனது கணவர் ரவிச்சந்திரன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் பிரபாவதி புகார் செய்து, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை செய்திட வேண்டியும் புகார் கொடுத்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu