கிளை வாய்க்கால்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை..!
குமாரபாளையம் அருகே பாலிப்பாறை பகுதியில் சேதமான மதகு
கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் கொள்ளளவு போக மீதி வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. குமாரபாளையம் தட்டான்குட்டை பகுதி உள்ளிட்ட வாய்க்காலில் பொக்லின் மூலம் வாய்க்காலில் விளைந்திருந்த மரங்கள், செடி, கொடிகள், தேங்கிய மழை நீர், சேறும் சகதியும் அகற்றப்பட்டன.
ஆக. 1ல் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிரதான வாய்க்கால் செல்லும் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் நிலையில் உள்ளது. ஆனால் கிளை வாய்க்கால் மூலம் பயன்பெறும் விவசாயிகள், இன்னும் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படாததால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீராக இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கிளை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் இன்றும் காய்ந்துதான் உள்ளன.
காவிரி ஆற்றில் இவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டும், கிழக்குக்கரை வாய்க்காலில் மேலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால், கிளை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் நிலங்கள் பயன் பெறும். பிரதான வாய்க்காலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் திறந்து விடும் நிலை வந்தவுடன் பொதுப்பணித்துறையினர் குமாரபாளையம் பகுதி துவக்க இடத்திலிருந்து, வாய்க்காலின் கடைமடைப் பகுதி வரை பொக்லின் கொண்டு மரம், செடி, கொடி, புதர்களை அகற்றினர்.
ஆனால் கிளை வாய்க்காலை யாரும் கண்டுகொள்ளவில்லை. மேட்டூரிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில், மேலும் தாமதம் செய்யாமல் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, பாலிப்பாறை பகுதியில் உள்ள கிளை வாய்க்கால் மதகு மிகவும் சேதமாகி உள்ளது. இது போல் பல மதகுகள் சேதமாகி உள்ளதால் இவைகளை சீராக்க வேண்டும்.
இந்த பணிகளை, வாய்க்காலில் தண்ணீர் வராத இரண்டு ஆண்டுகளில் செய்திருக்கலாம். தண்ணீர் வந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், வாய்க்கால் நீரை நிறுத்திதான் மதகு பராமரிப்பு செய்ய வேண்டும். எப்போது தண்ணீர் வாய்க்காலில் வரும் என எதிர்பார்த்து, விவசாய பணிகளை துவங்கி வரும் நிலையில், தண்ணீரை நிறுத்தினால் பல விவசாயிகள் அதிருப்தியடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu