நீதிமன்ற கட்டிடம் குறித்து பொய் பிரச்சாரம்: நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்
குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
குமாரபாளையம் அருகே மேட்டுக்கடை பகுதியில் நீதிமன்ற கட்டிடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பொய் பிரச்சாரம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சரவணராஜன் கூறியதாவது:-
இன்று குமாரபாளையம் நகரில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளில் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மேட்டுக்கடை என்னும் இடத்தில் தமிழ்நாடு அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் குமாரபாளையம் வட்டத்திற்கு நிரந்தர நீதிமன்ற கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதாக பொய்யாக குறிப்பிட்டுவைத்துள்ளார்கள்.
இதே வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் நாளிதழ்களில் வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இடமானது மிகவும் தரம் குறைந்த இடம். அதனை அதிக விலைக்கு விற்பதற்காகவும், பொது மக்களின் வளங்களை கொள்ளையடித்து துர்லாபம் அடையவும், உயர் நீதிமன்ற நீதியரசர், மாவட்ட நீதிபதிகளின் பெயர்களையும் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி உள்ளதை சுட்டிக்காட்டி குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தவறு செய்த கதிர்வேல் மற்றும் அவர்கள் கூட்டாளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செயலாளர் நடராஜன், பொருளாளர் நாகப்பன், துணை தலைவர் நந்தகுமார், துணை செயலாளர் ஐயப்பன், மற்றும் நிர்வாகிகள் கருணாநிதி, கார்த்திக் உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu