கொட்டி வைத்த குப்பையால் அரசு பஸ் மோதி பொறியாளர் உயிரிழப்பு
பொறியாளரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் குமாரசாமி, 50. தனியார் நிறுவன பொறியாளர். இவர் நேற்று பகல் 11:30 மணியளவில் மஞ்சுபாளையம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு செய்ய தனது டி.வி.எஸ். ஸ்போர்ட்ஸ் வாகனத்தில் குமாரபாளையம் சேலம் சாலை பவர்ஹவுஸ் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, நாய்கள் குறுக்கே ஓடி வந்ததால் நிலை தடுமாறியதில் கீழே விழுந்தார். இவரது அருகே வந்து கொண்டிருந்த எஸ்.2 எனும் சங்ககிரி செல்லும் அரசு டவுன் பஸ் பின் சக்கரம் இவர் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பஸ் ஓட்டுநர் சங்ககிரியை சேர்ந்த சந்திரன், 59, என்பவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பவர் ஹவுஸ் அருகே குப்பைகள் மலை போல் கொட்டி வைக்கபட்டுள்ளது. இங்கு சாப்பிட கிடைக்கும் என கூட்டம் கூட்டமாக நாய்கள் வருகின்றன. இப்படி வந்த நாய்களுக்கு சண்டை ஏற்பட்டு சாலையில் வர, இதனால் நிலைதடுமாறி இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையின் ஒரு புறம் குடியிருக்கும் குப்பாண்டபாளையம் ஊராட்சி குடியிருப்பு வாசிகள், சாலையின் மறுபுறம் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதனால் பறவைகளும் மின் கம்பியில் அமர்வதால் மின் இணைப்பு துண்டிப்பு சம்பங்களும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் சாலையில் இருபுறமும் நடைபாதைக்காக போடப்பட்ட பேவர் பிளாக் தரைத் தளம் முழுவதும் ஆட்டோ பைனான்ஸ் உள்ளிட்ட பல தொழில் நிறுவனத்தார் 2 கி.மீ. தூரம் ஆக்கிரமிப்பு செய்ததால், இரு சக்கர வாகன ஓட்டிகள், பஸ், லாரி வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாத நிலையும் பல விபத்திற்கு காரணமாக அமைகின்றன.
இது குறித்து குப்பை கொட்டாமல் இருக்கவும், சாலை ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu