காவிரிநீரை மாசுபடுத்திய ஜவுளி பிரிண்டிங் நிறுவனம் : வாகனங்கள் பறிமுதல்
பிரிண்டிங் செய்த துணிகளை, சமயசங்கிலி காவிரி ஆற்றில் அலசுவதற்காக எடுத்து வந்த டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையம் தொகுதியில் உள்ள சாயப்பட்டறைகளின் கழிவுகள், காவிரி ஆற்றில் கலந்து, தண்ணீர் மாசுபடாமல் இருக்க, நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர். விதிமுறைகளை மீறிய சாயப்பட்டறைகளை பொக்லின் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு பிரிண்டிங் ஜவுளி நிறுவனம் தரப்பில், பிரிண்டிங் செய்த துணிகளை, சமயசங்கிலி காவிரியில் அலசி, ஆற்று நீரை மாசு படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் செல்வகுமார் தலைமையில், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர்.
வருவாய் ஆய்வாளர் விஜய், கிராம நிர்வாக அதிகாரி செந்தில் குமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினரும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். இவர்களை கண்டதும், 3 டெம்போ ஓட்டுனர்கள், மற்றும் பணியாளர்கள் சிலரும், சமயசங்கிலி காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து தப்பி ஓடினார்கள். அங்கிருந்த 3 டெம்போக்கள், அதில் இருந்த 3 லட்சம் மதிப்புள்ள பிரிண்டிங் துணிகளை அதிகாரிகள் கைப்பற்றி, பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu