நகரமன்ற கூட்டத்தில் திமுக- அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
குமாரபாளையம் நகராட்சி சார்பில் அவசர நகரமன்ற கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சொத்துவரி உயர்வுக்கு ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. கவுன்சிலர் ரங்கநாதன், அனைத்து கவுன்சிலர்களுக்கு தகவல் தராமல் நகராட்சி கடை ஏலம் நடத்தியது தவறு என்றும், ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இது அவசர கூட்டம், மற்ற கோரிக்கைகள் குறித்து மற்ற கூட்டத்தில் பேசிக்கொள்ளலாம் என்று கூறி சேர்மன் விஜய்கண்ணன் கூட்டம் நிறைவு பெற்றது என கூறி, அரங்கை விட்டு வெளியேறினார்.இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்ட அரங்கில் தர்ணா மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரமன்ற துணை சேர்மன் வெங்கடேசன் கூறியதாவது: சொத்துவரி சம்பந்தமான அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஏகோபித்த ஆதரவு தெரிவித்தனர். கேள்வி கேட்க முற்படும் போது அவர் தன்னிசையாக வெளியேறி விட்டார். நேற்று மார்க்கெட் கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. சில நாட்கள் முன்பு பாலம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இவைகளுக்கு எங்கள் அமைச்சர், மாவட்ட செயலரை அழைத்து விழா நடத்தி பூமி பூஜை நடத்தலாம் என இருந்தோம். ஆனால் முதல் நாள் மாலை 07:00 மணிக்கு தகவல் தெரிவித்து, காலை 11:00 மணியளவில் அவர் பூமி பூஜை போடுகிறார். மேலும் சில நாட்கள் முன்பு தூய்மை பணியாளர்களுக்கு குறைதீர் கூட்டம் நடத்துகிறார். அதில் பின்புறமுள்ள பேனரில் முதல்வர் படம், அமைச்சர் படம் கூட இல்லாமல், அவரது படம் மட்டும் போட்டு கூட்டம் நடத்தியுள்ளார். மே. 17ம் தேதி நடந்த நகராட்சி கடை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது. அந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார் அவர்..
அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி கூறியதாவது:சொத்துவரி உயர்வு குறித்து அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே வெளிநடப்பு செய்துள்ளோம். மார்க்கெட் பூமி பூஜைக்கும் முறையான அழைப்பு இல்லை. நகராட்சி கடை ஏலத்திற்கும் அனைத்து கவுன்சிலர்களுக்கு முறையான தகவல் வரவில்லை. இதனை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
இது குறித்து நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறியதாவது:நகராட்சி கடை ஏலம் முறைப்படி நடைபெறவில்லை என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் தி.மு.க., அ.தி.மு.க.வினர் கோரிக்கை கொடுத்துள்ளனர். இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்..
இது பற்றி தகவலறிந்த போலீசார் நகரமன்ற கூட்ட அரங்கிற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கவுன்சிலர்களை வெளியே அழைத்து வந்தனர்.
இது பற்றி நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறியதாவது:பூமி பூஜை நடத்த அமைச்சரை தொடர்பு கொண்ட போது, அவர் டெல்லி சென்றதாக தகவல் கிடைத்தது. அதனால் அழைத்து வர முடியவில்லை. கடை ஏலம் நடந்த போதும் அனைத்து கவுன்சிலர்களுக்கும் தகவல் தரப்பட்டு முறைப்படிதான் நடத்தப்பட்டது என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu