குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
Namakkal Collector -குமாரபாளையத்தில் நேற்றைய தினம் 7.5 செ.மீ அளவிற்கு கனமழை பெய்தது. அதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஓடையில் அதிகளவில் மழை நீர் சென்று கொண்டுள்ளது. மழையின் காரணமாக பள்ளியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்., ஆய்வு செய்தார்.
பள்ளியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை குழாய் பதித்து அதன் மூலம் அருகில் உள்ள ஓடையில் விரைந்து வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், ஓடையின் ஆழத்தை கூடுதலாக்கவும் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அருகில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.மேலும், ஒலப்பாளையம் பகுதி, கத்தேரியில் மழையின் காரணமாக ஏரியில் நீர் நிரம்பியதால், அப்பகுதியில் உள்ள வாய்கால்களில் வெளியேறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றுமாறு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கம்பன்நகர், பாரதி நகர் பகுதிகளில் பார்வையிட்டார்.
குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள விவசாய நிலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த விவசாய நிலத்தின் நடுவே தரை மட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மீதுதான் பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளி சென்று வந்தாக வேண்டும். இப்போதே தண்ணீர் அதிகம் உள்ளதால்,இனி மழை பெய்தால் தரை பாலம் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இதனால் மாணவ, மாணவியர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும் பள்ளி முடிந்து கூட்டமாக செல்லும் போது, தவறி தண்ணீரில் விழும் நிலையும் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்னதாக இந்த தண்ணீரை உடனே வெளியேற்ற ஊராட்சி நிர்வாகத்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இங்கும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
குமாரபாளையத்தில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில், கோம்பு பள்ளத்தில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. கோம்பு பள்ளத்தின் ஒரு பகுதி கழிவுநீர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி ஓடி வருகிறது. கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியதால், பள்ளி வளாகத்தில் மழை நீர் புகுந்து குளமாய் தேங்கி நின்றது. சில நாட்கள் முன்பு இதே போல் மழை நீர் தேங்கியதால் பள்ளி விடுமுறை விடப்பட்டது. மாணவியரின் கல்வி பாதிக்காமல் இருந்திட கோம்பு பள்ளத்தினையொட்டிய சுவற்றின் உயரம் அதிகபடுத்தி, பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் புக முடியாதபடி செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் அருகே உள்ள கோம்பு பள்ளம், ஆக்கிரமிப்பால் குறுகியதாக மாறியதால், கோம்புபள்ளத்தின் நீர் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் நுழைகிறது. இந்த தண்ணீர், கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட துளையின் வழியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுழைகிறது. மேலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி சுற்றுச்சுவர் உடைப்பாலும் கோம்பு பள்ளம் நீர் நுழைகிறது. இங்கு குளம் போல் மழைநீர் தேங்கியதால் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தேங்கிய மழைநீரை அகற்றினர்.
இதில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜயகண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி,ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன், தலைமை ஆசிரியர்கள் ஆடலரசு, சிவகாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உள்பட பலர் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu