குமாரபாளையத்தில் குழந்தை உயிரிழப்பால் அதிருப்தி; உறவினர்கள் சாலை மறியல்
குழந்தை உயிரிழப்பால் அதிருப்தியடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் துர்கா, 23, செல்லமுத்து, 28. செல்லமுத்து திருப்பூர் தனியார் நிறுவன கூலி. துர்கா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் நேற்றுமுன்தினம் பகல் 11:30 மணியளவில் பிரசவத்திற்காக குமாரபாளையம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.
இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்து உடனே இறந்துவிட்டதாக நர்சுகள் கூறினர். துர்காவின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால், அவரை மருத்துவமனை நிர்வாகத்தினர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், உதாசீனமாக பேசிய நர்ஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், அதுவரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, அரசு மருத்துவமனை முன்பு காலை 11:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குமாரபாளையம் போலீசார் நேரில் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை கூறி கூட்டத்தை கலைய வைத்தனர்.
இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறுகையில், துர்காவின் உடல்நிலை குறித்து இரவு முழுதும் நர்ஸ் எங்களுக்கு தகவல் கொடுத்துக்கொண்டே இருந்தார். இரவு நேரப் பணியில் டாக்டர் நித்யாவும் இருந்தார். சி.டி.ஜி எனப்படும் நாடித்துடிப்பும் சீராக இருந்தது.
அதிகாலை 02:00 மணியளவில் பனிக்குடம் உடைந்து, குழந்தை கர்ப்பபையில் இயற்கை உபாதை கழித்துள்ளது. குழந்தை வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டது. மூச்சு திணறலால் குழந்தை இறந்துள்ளது. இதனை தடை பட்ட பிரசவம் என்று கூறுவார்கள்.
எப்போதோ ஒருமுறை இது போல் நடைபெறும். துர்காவின் கர்ப்பப்பை பலகீனமானது. ரத்த போக்கும் அதிகரிக்க தொடங்கி, ரத்தம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், ஈரோடு ஜி.ஹெச்.க்கு துர்கா அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது துர்காவின் நிலை ஆரோக்கியமாக உள்ளது. நர்ஸ் அனைத்து பணிகளையும் நிறைவாக செய்து கொண்டே இருந்தார்.
பதட்டத்துடன் இருந்த துர்காவின் உறவினர்களிடம் நர்ஸ் கோபத்துடன் பேசியதுதான், அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இது குறித்து துணை இயக்குனரிடமும் நிலைமையை எடுத்து சொல்லி, நர்ஸ் குறித்து புகார் கூறியுள்ளேன். ஆயினும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டதில் ஈடுபட்டனர்.
பொதுமக்களிடம் கனிவுடன் பேசுங்கள் என நர்ஸ்களிடம் கூறினாலும், சிலர் இது போல் கோபத்துடன் பேசி வருவதால் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுகிறது. 2019ல் இது போல் இந்த மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறந்தது. அதன் பின் இப்போதுதான் இது போல் நடந்துள்ளது. குறைந்த வயதில் திருமணம் செய்து கொண்ட பெண்களால், பிரசவத்தின் போது சில வலிகளை தாங்க முடியாத நிலை ஏற்படுகிறது என டாக்டர் பாரதி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu