நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு பரிசலில் சென்று கும்பாபிஷேகம் நடத்திய பக்தர்கள்
பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் காவிரி ஆறு நடுவில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழைமையான நட்டாற்றீஸ்வரர் எனும் ஆதி விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு பரிசலில் கும்பாபிஷேக விழாவை பக்தர்கள் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்தி பாளையம் கிராமத்தில், காவிரி ஆற்றின் நடுவில் ஸ்ரீ அருள்தரும் விசாலாட்சி அம்மை உடனமர், அருள்தரும் ஆதி விஸ்வேஸ்வரர் எனும் நட்டாற்றீஸ்வரர் கோவில் பாறைகளின் நடுவே அமைந்துள்ளது .
சுமார் 300 ஆண்டு காலம் பழமையான கோவிலாக கருதப்படும் இந்த கோவிலுக்கு, ஆவத்திபாளையம் காவிரி கரை ஓரத்தில் இருந்து நடு ஆற்றில்பரிசல் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.
இந்தக் கோவிலில் 108 சங்காபிஷேக விழாவுடன், கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பரிசல் மூலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். கோவில் கலசங்களுக்கு சிறப்பு விசேஷ பூஜைகள்,கோவிலில் உப தெய்வங்களாக உள்ள சிவகாமி அம்மை உடனமர் ,ஆனந்த நடராஜர் சப்த கன்னிமார்கள், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்வுகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி, கைலாய வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் பாறைகளின் நடுவே உள்ள ஒரே கோவில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu