குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்

ஆயுதபூஜை தின விழாவையொட்டி குமாரபாளையத்தில் பூஜை பொருட்கள் வாங்க தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் குவிந்த மக்கள்.
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தவே ஆயுத பூஜை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. வாழ்வில் நம்மை உயர்த்தும் ஆயுதங்களைப் போற்றும் வகையில் அவற்றை இறைவனாக பாவித்து அவற்றால் யாருக்கும் எவ்வித தீங்கும் நேராமால் வைத்திருக்கும் வகையில் வழிபடுவதே ஆயுத பூஜை பண்டிகை ஆகும்.
ஆயுத பூஜையன்று வீட்டில் இருக்கும் கரண்டி முதல் எலக்ட்ரானிக் சாதனம் வரை சுத்தம் செய்து வீட்டை அலங்கரித்தல், புத்தகங்களுக்கு சந்தனம் தெளித்தும், வீட்டில் இருக்கும் ஆயுதங்கள் கத்தி, அரிவாள் மனை போன்ற ஆயுதங்களையும் வைத்து வழிபட்டு அவற்றிற்கு அன்று ஒய்வளிக்க வேண்டும். அடுத்த நாள் கற்பூர தீபாராதனை காட்டி அதை கலைத்து பயன்படுத்துவதும் தான் இந்த பூஜையின் சிறப்பம்சம்.
இந்த நிலையில் குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர்.
ஆயுதபூஜை தின விழாவையொட்டி பூஜை பொருட்கள், பொரி, கடலை, வாழைக்கன்றுகள், மாவிலை உள்ளிட்ட பொருட்கள் வாங்க தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் குவிந்தனர். இதனால் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் தங்கள் விசைத்தறி கூடங்கள், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் ஆயுத பூஜை போட்டனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பொரி, சுண்டல், பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
சைக்கிள் ஸ்டாண்ட்கள், கார் ஸ்டாண்டுகள், பஸ் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் ஆயுத பூஜை நடத்தப்பட்டன. சேலம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ பைனான்ஸ் உள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான வாகங்களுக்கு பூஜை போடப்பட்டது. இந்த நாளில் பல வெளியூர்களில் இருந்து டூவீலர்கள் வாங்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். பூஜை போட்டதும் பில் போட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பைனான்ஸ் நிறுவனத்தாரும் ஓரிரு வாடிக்கையாளர்களை ஏற்பாடு செய்து வைப்பதும் உண்டு.
இதே போல் விசைத்தறி ஜவுளி நிறுவனத்தாரும் பூஜை போட்டதும் தாங்கள் உற்பத்தி செய்த ஜவுளியை விற்பதற்கான பில் போடுவது வழக்கம். அதே போல் 100க்கும் மேற்பட்ட கைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இவர்களும் ஆயுத பூஜையையொட்டி கைத்தறிகள், ராட்டைகள், உள்ளிட்டவைகளுக்கு பூஜை செய்வது வழக்கம்.
கைத்தறியில் தயார் செய்யப்படும் பட்டுசேலைகள், சுடிதார், அங்கவஸ்திரம், வேட்டிகள் உள்ளிட்ட ஜவுளிகள் வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் என ஏற்றுமதி செய்யப்படுவது உண்டு. அதற்கான முதல் பில் இந்த நாளில் போடுவது வழக்கம். தீபாவளி சமயமாதலால் பிரபல ஜவுளி கடை வைத்திருக்கும் வியாபாரிகள் குமாரபாளையம் உற்பத்தி ரகங்களை காத்திருந்து வாங்கி செல்வது இன்றும் நடந்து வருகிறது. நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றாலும் பல கஷ்டங்களை தாங்கி கொண்டு இந்த தொழிலில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu