மணிப்பூர் கலவரத்தை கண்டித்து குமாரபாளையத்தில் சி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசை கண்டித்து குமாரபாளையத்தில் சி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணிப்பூர் மாநில மக்களை பிளவு படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குமாரபாளையம் சி.பி.ஐ. சார்பில் நகர துணை செயலாளர் அசோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதில் வக்கீல் கார்த்திகேயன், நிர்வாகிகள் மனோகரன், கிருஷ்ணசாமி, கணேஷ்குமார், ஈஸ்வரன், சரசு, அம்சவேணி, உள்பட பலர் பங்கேற்றனர்.
மணிப்பூர் கலவரம் தொடங்கி ஒன்றரை மாதமாகி விட்டது. கிட்டத்தட்ட 250 கிறிஸ்தவ தேவாலயங்கள், 17 இந்துக் கோவில்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. 200 கிராமங்கள் தீவைத்துக் கொளுத்தப் பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொதுச்சொத்துக்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன. இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும் கர்நாடகத் தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டபோது தொடங்கியது மணிப்பூர் கலவரம். இத்தனை நடந்த பின்னும் இந்த விவகாரத்தில் பிரதமர் ஒரேயொரு வார்த்தைகூட பேசவில்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும் உடனுக்குடன் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டியிருந்தால் இந்தக் கலவரம் அன்றே முடிந்திருக்கும்.
இன்றைக்கு முகாம்களில் இருப்பவர்கள் மற்றும் மணிப்பூரை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாகிவிட்டது. மெய்ட்டி, குக்கி இனத்தவர்கள், இரு தரப்பும் மாறி மாறி கலவரத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
பொது ஜனங்களைத் தாண்டி, எம்.எல்.ஏ. பிஸ்வஜித் வீட்டையும், பா.ஜ.க. தலைவரான சாரதாதேவி வீட்டையும் சிலர் எரிக்க முயல, ஆரம்பத்திலேயே அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மாறாக, மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கின் வீட்டை கலவரக்காரர்கள் எரித்து அழித்திருக்கின்றனர்.
2001-ல் இத்தகைய நீண்ட வன்முறைச் சம்பவம் மணிப்பூரை நிலைகுலையச் செய்தபோது, அப்போதைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பேயி அனைத்துக் கட்சிக் கூட்டங்களை இருமுறை கூட்டி ஆலோசித்தார். மணிப்பூர் மக்களை அமைதி காக்குமாறு பிரதமரே இறங்கிவந்து கேட்டுக்கொண்டார். மெல்ல மெல்ல மக்கள் அமைதிக்குத் திரும்பினர்.
இந்த ஒன்றரை மாதங்களுக்குப் பின்பு, இனியாவது பிரதமர் மணிப்பூர் விஷயம் குறித்து வாய்திறந்து பேசவேண்டும். அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளில் மோடி அக்கறை காட்டவேண்டும் என இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu