ராகுல் தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலர் செல்வகுமார் பேசினார்.

குமாரபாளையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல்காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். ராகுல்காந்தியின் பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்த்தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் ராகுல்காந்தியைக் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து அவரது மக்களவை உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அதனை எதிர்த்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அதன்படி, குமாரபாளையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இதில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலர் கோகுல்நாத், மனோகரன், நகர பொருளர் சிவராஜ், நகர பொது செயலர் சுப்ரமணி, முன்னாள் கவுன்சிலர் மோகன்வெங்கட்ராமன், உள்பட பலர் பங்கேற்றனர்.

இரு நாட்களுக்கு முன் குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில், நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!