குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் தோழர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் தோழர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் விடியல் ஆரம்பம் சார்பில் தோழர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் தோழர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள், அறிவியல் கண்டுபிடிப்பு சாதனையாளர்கள், பிரபல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரது பிறந்த நாள் விழாக்கள் மாணவ, மாணவியர்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலகம் எதிரில் புத்தக கண்காட்சியில் தோழர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தங்கங்கள், முக கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன.

இதில் பிரகாஷ் பேசுகையில்,

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார்.

ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.

கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.

வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவ்வாறு அவர் பேசினார்.இந் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சண்முகம், பாலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!