குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் கலெக்டர், எஸ்.பி. ஆய்வு
குமாரபாளையம், காவிரி கரையோரப்பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஷ்ரேயாசிங் ஆய்வு மேற்கொண்டார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக, காவிரியில் நீர் வரத்து அதிகமாகி உள்ளது. இதனால், மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, காவிரி கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட போலீஸ் எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்டோர், குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியான மணிமேகலை தெரு, இந்திரா நகரில் ஆய்வு செய்தனர். அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் கலெக்டர் கூறியதாவது:
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரால், வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளோம். காவிரியில் வெள்ளம் வந்தால் நீங்கள் பாதுகாப்பாக தங்க வைக்க, அரசு பள்ளி மற்றும் நகராட்சி திருமண மண்டபம் தயார் நிலையில் உள்ளது.
நகராட்சி, தாலுக்கா அதிகாரிகளும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். தற்காலிக பாதுகாப்பு மையத்தில் உங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியமான உதவிகள் செய்து தரப்படும். அச்சமின்றி இருங்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார் , நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu