குமாரபாளையம் அருகே கோமாரி நோய்த் தாக்குதல்: விவசாயிகள் பீதி

குமாரபாளையம் அருகே கோமாரி நோய்த் தாக்குதல்: விவசாயிகள் பீதி
X

குமாரபாளையம் அருகே கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையம் அருகே கால்நடைகள் கோமாரி நோய் தாக்குதலுக்குள்ளானதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் உள்ளிட்ட பல நோய்கள் வருவது வழக்கம். தற்போது பருவமழை வந்து கொண்டிருப்பதால் குமாரபாளையம் அருகே உள்ள பல கால்நடைகள் இந்த நோயின் தாக்கத்தால் நோயுற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது பற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கல்லங்காட்டுவலசு, வீ. மேட்டூர், மோளக்கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், கலியனூர், வெள்ளைப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் பல மாடுகள் கோமாரி நோயால் தாக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாக்கத்தான் அரசு சார்பில் மாட்டு கொட்டகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை பெற விவசாயிகள் விண்ணப்பம் கொடுக்கப்பட்டும் பலருக்கு இதுவரை ஆணை வழங்கப்படாமல் உள்ளது. மாட்டுக்கொட்டகை இல்லாத இடங்களில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மழையில் நனைந்தவாறு இருப்பதால், கோமாரி நோய் உள்ளிட்ட நோயால் தாக்கப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மழை ஈரத்தில் நின்று கொண்டே இருப்பதால் கால் பாதங்களில் புண் ஏற்பட்டு நோய் தாக்குதலுக்கு ஆளாகிறது. பால் மாடு ஒன்று வாங்க வேண்டுமானால் ஒரு மாடு 50 ஆயிரம் ரூபாய் வருகிறது. கடன் பெற்று மாடு வாங்கினாலும், அதனை பாதுகாக்க மாட்டு கொட்டகை இல்லாததால் நோய் தாக்குதலுக்கு ஆளாகி, கலியனூர் பகுதியில் புகழேந்தி என்பவரது மாடு இறந்துள்ளது.

இது போல் இனியும் நடக்காதிருக்க மாவட்ட நநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டு கொட்டகை கேட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து உரியவர்களுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

இது பற்றி வீ.மேட்டூர் கால்நடை மருத்துவர் செந்தில்குமார் கூறுகையில், கால்நடைகள் கோமாரி நோய் தாக்குதலில் இருந்து காத்திட நாளை சிறப்பு மருத்துவ முகாம் கல்லங்காட்டுவலசு பகுதியில் நடைபெறவுள்ளது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!