சவுண்டம்மன் திருவிழா சாமுண்டி அழைப்பு வைபவம்
சாமுண்டி அழைப்பு வைபவத்தில் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்த வீர குமாரர்கள்
குமாரபாளையத்தில் சேலம் சாலை சவுண்டம்மன் திருவிழா ஜன. 8ல் முகூர்த்தக்கால் வைபவத்துடன் துவங்கியது. முதல் நிகழ்வாக சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. நேற்று சாமுண்டி அழைப்பு வைபவம் காவேரி ஆற்றிலிருந்து தொடங்கி, வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு, குதிரை மீது சர்வ அலங்காரத்துடன் அமர்ந்திருந்த அம்மனை, தண்டகம் பாடி வீரகுமாரர்கள் அழைத்து வந்தனர்.
வீரமுண்டி எனப்படும் நான்கு நபர்கள் ஆக்ரோஷ ஒப்பனையுடன், வீரகுமாரர்கள் கூடியிருந்த கூட்டத்தில் புகுந்து வாள் வீச்சு நடத்தி, எதிர்த்து போராட, வீரகுமாரர்கள் அந்த வீரமுண்டிகளை எதிர்கொண்டு போராடியது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. வீரகுமாரர்கள் அனைவரும் மஞ்சள் வேட்டி அணிந்து, பூணூல், கங்கணம் அணிந்தவாறு, முறையாக கத்தி போடும் பயிற்சி பெற்று, வரிசையில் நின்று, பேண்டு வாத்திய இசைக்கு ஏற்றார்போல் அணிவகுத்து ஆடுவதை பொதுமக்கள் ரசித்தனர்.
குமாரபாளையத்தில் தேவாங்க சமுதாயத்தினர் பெருமளவில் இருப்பதால், அச்சமூக மக்களுக்கு இந்த திருவிழா மிக முக்கிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. குமாரபாளையத்தில் இரு சவுண்டம்மன் கோவில்கள் இருப்பதால் ஆண்டிற்கு ஒரு கோவில் திருவிழா நடத்துவது என பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
பல வெளியூர்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் பெரிய பொங்கல் வைபவம் நடந்தது. சாமுண்டி அழைப்பு வைபவத்தையொட்டி அம்மன், சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று இரவு 07:00 மணியளவில் மகா ஜோதி திருவீதி உலா நடைபெறவுள்ளது. நாளை காலை மஞ்சள் நீராட்டு திருவீதி உலா, மாலையில் அலங்கார ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu