டூவீலரை இழுத்துச்சென்ற பஸ்: கூலித் தொழிலாளி படுகாயம், பஸ் ஓட்டுனர் கைது
பைல் படம்.
சங்ககிரி, குப்பனூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரகுராஜ், 25. இவர் நேற்றுமுன்தினம் மாலை 03:15 மணியளவில் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் ஜே.கே.கே. நடராஜ கல்லூரி அருகில் தனது ஹீரோ ஸ்பெலன்டர் வாகனத்தில் சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது இவர் அருகே வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஓட்டுனர், எவ்வித சிக்னலும் செய்யாமல், பஸ் நிறுத்தம் இல்லாத இடத்தில், நின்று கொண்டிருந்த பயணிகளை ஏற்ற வேண்டி, இடது புறம் வளைத்த போது, டூவீலரின் கைப்பிடி பஸ்ஸில் சிக்கியதில், ரகுராஜ் இழுத்து செல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் சத்தம் போடவே, பஸ் ஓட்டுனர் சங்ககிரியை சேர்ந்த குமரேசன், 45, நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த ரகுராஜ், குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், பஸ் ஓட்டுனர் குமரேசனை கைது செய்தனர்.
காணாமல் போன லாரியை மீட்ட போலீசார்
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், 31.லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். அக்.25 அதிகாலை 02:45 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை 06:00 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குமார் புகார் கொடுத்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், எஸ்.ஐ. சதீஸ்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், இளமுருகன், போலீஸ் சரவணன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன லாரியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில், காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது. காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு, 24, லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ்,36, அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், 38, ஆகிய மூன்று பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். புகார் கொடுக்கப்பட்ட இரண்டு நாட்களில் காணாமல் போன லாரி மீட்கப்பட்டது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், காணாமல் போன லாரியை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. காவேரி நகர் பகுதியில் ஆய்வு செய்த போது, போலீஸ் யாராவது இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள மாருதி ஆம்னி காரில் முன்னால் வந்து யாரும் இல்லை என்பதை அறிந்து, லாரியை இடைப்பாடி கொண்டு செல்ல முயற்சித்தனர். தனிப்படை போலீசாரால் கார், லாரி மற்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறினார்.
ஆட்டோ மோதி முதியவர் படுகாயம்
குமாரபாளையம் கிழக்கு காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் பழனிசாமி, 71. இவரும், இவரது மனைவியும் சேலம் உறவினர் வீட்டு கடை திறப்பு விழாவிற்கு சென்று விட்டு, இரவு 11:00 மணியளவில் குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே நின்று கொண்டிருக்கும் போது, அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பழனிசாமி மீது மோதியதில் படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக சேலம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுனர் பெரியார் நகரை சேர்ந்த செந்தில்குமார், 40, என்பவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.
கூலித் தொழிலாளி தற்கொலை
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் அரிசி கடை வைத்து தொழில் செய்து வருபவர் கவிதா, 42. இவரது கணவர் பாபு சங்கர், 47. இவர் ஈரோட்டில் பீஸ் மடிக்கும் வேலைக்கு சென்று வருகிறார். தன் நண்பன் ஒருவன் பணம் கடன் வாங்கி தர சொன்னதின் பேரில் ஈரோட்டில் ஒருவரிடம் கடனாக பணத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
பணம் வாங்கியவர் பணம் தராமல் ஏமாற்றி வந்ததால், பணம் கடன் கொடுத்த கூளக்கவுண்டர் மகன் கார்த்திக், 32, பாபு சங்கரை பணம் தரும்படி அடிக்கடி கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாபுசங்கர் உணவில் எலி பேஸ்ட் சாப்பிட்டதாகவும், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 01:00 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே வர சொல்லி, தன் நண்பர் ஜெகதீஸ்வரனுக்கு போனில் தகவல் தர, நேரில் சென்ற அவர், பாபுசங்கரை ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்த்தார். நேரில் சென்ற மனைவியிடம் தான் குமாரபாளையத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்டவிஷயத்தை கூறியுள்ளார். சிகிச்சை பலனின்றி இவர் நேற்று காலை 07:00 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் சுப்ரமணியம், 33, எலெக்ட்ரிசியன். இவர் நேற்று மாலை 01:20 மணியளவில் ஹீரோ ஸ்ப்லேண்டர் வாகனத்தில் சேலம் கோவை புறவழிச்சாலை ராயல் பள்ளி பிரிவு சாலை எதிர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ஒருவழி பாதையில் வேகமாக வந்த லாரி டூவீலர் மீது மோதியதில் இவர் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இவர் வரும் வழியில் உயிரிழந்தார். இது குமாரபாளையம் போலீசார் லாரி ஓட்டுனர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த பெர்க்மான்ஸ், 60, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu