குமாரபாளையம் அருகே நடு வழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து
குமாரபாளையத்திலிருந்து பவானி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், பள்ளிபாளையம் சாலை, கே.ஓ.என்.தியேட்டர் அருகே பழுதாகி நின்றது.
குமாரபாளையத்தில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சங்ககிரியிலிருந்து பவானி செல்லும் எஸ்.2 என்ற அரசு பஸ் குமாரபாளையம் பஸ் நிலையத்திலிருந்து பவானி நோக்கி சென்று கொண்டிருந்தது. பள்ளிபாளையம் சாலை, கே.ஓ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வரும் போது, பழுதாகி பஸ் நின்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, பழுது நீக்கி, அதன் பின் பஸ் செல்லும் நிலை ஏற்பட்டது.
அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால்தான் அடிக்கடி இது போல், நடு வழியில் பயணிகளுடன் நிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் பஸ்கள் டெப்போவில் நிற்கும் போது, மெக்கானிக்குகளை கொண்டு பரிசோதித்து, பராமரிப்பு செய்திட வேண்டும். ஓடும் வரை ஓடட்டும், பழுதாகி நின்றால் பார்த்து கொள்ளலாம் என்று இருந்தால், பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். சில சமயங்களில் சிறு கவனக்குறைவால், பெரும் விபத்து கூட ஏற்படும் நிலை உருவாகும். இதனால் பல பொதுமக்கள் பாதிக்கப்படும் முன்பு அரசு பஸ்களை முறையாக தினமும் பாரமரிப்பு செய்திட வேண்டும், என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையத்திலிருந்து ஈரோட்டிற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. ஈரோடு ஜவுளி சந்தை என்பதால், குமாரபாளையம் நகரில் உற்பத்தியாகும் விசைத்தறி ஜவுளி ரகங்களை விற்பனைக்கு பேருந்தில் கூட கொண்டு செல்வது வழக்கம். மேலும் குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் ஈரோடு மார்க்கெட்டிலிருந்து வருவதும் வழக்கம். குமாரபாளையம் அருகே உள்ள நகர பகுதி என்பதால், பொதுமக்கள் ஜவுளிகள், நகைகள் வாங்கவும், வருடாந்திர மளிகை பொருட்கள் வாங்கவும் பேருந்துகளில் சென்று வருவது வழக்கம்.
மேலும் உடல்நலம் சரியில்லாத நபர்களை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றாலும், ஆபத்தான நிலை என்றால், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நோயாளியை அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து விடுகிறார்கள். இதனால் நோயாளிகளை பார்க்கவும் ஈரோட்டிற்கு பேருந்துகள் மூலம் சென்று வருகிறார்கள். சில தனியார் மருத்துவமனைகளும் இருப்பதால், அங்கும் பொதுமக்கள் சென்று வருகிறார்கள். ஈரோடு பேருந்து என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 03:30 மணியளவில் டைமிங் தகராறு காரணமாக தனியார் பேருந்து, அரசு பேருந்தை செல்ல விடாமல், பேருந்தின் முன்பு, தனியார் பேருந்தை நிறுத்திக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இவர்களுக்கு பின்னால் வந்த பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பயணிகள் அவதிக்கு ஆளாகினர். டைமிங் தகராறு என்றால், ஒரு இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். அல்லது போலீசில் சொல்லி தீர்வு காண வேண்டும். இவ்வாறு செய்வதால் இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu