குமாரபாளையத்தில் மருந்தில்லா விவசாயம் குறித்த வேளாண்மை கருத்தரங்கு
குமாரபாளையத்தில் பாரம்பரிய வேளாண்மை ஊக்குவித்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது
குமாரபாளையத்தில் நடந்த வேளாண்மை கருத்தரங்கில் மருந்தில்லா விவசாயத்தால் தரமான உணவு, சாகுபடி செலவு குறைவு என வேளாண்மை துணை இயக்குனர் கூறினார்.
குமாரபாளையத்தில் பாரம்பரிய வேளாண்மை ஊக்குவித்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி மற்றும் அட்மா குழு தலைவர் யுவராஜ் தலைமை வகித்தனர். இதையொட்டி நடந்த விழிப்புணர்வு பேரணியை குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா, ராகவேந்திரா கல்லூரி முதல்வர் விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் துவங்கிய பேரணி, ரோட்டரி மகாலில் நிறைவு பெற்றது. கல்லூரி மாணவ, மாணவியர், 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். பாரம்பரிய விவசாயம், இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் கைகளில் ஏந்தியவாறும, கோஷங்கள் போட்டவாறும் பேரணியில் பங்கேற்றவர்கள் சென்றனர். நாமக்கல் வேளாண்மை துணை இயக்குனர் கோவிந்தசாமி பங்கேற்று, நவீன விவசாய தொழில்நுட்பம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-
விவசாயிகள் பாரம்பரிய விவசாயம் பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் உணவளிக்கும் அற்புத பணியை நாம் செய்வது நமக்கு பெருமையாகும். மருந்தில்லா விவசாயத்தை நாம் அனைவரும் செய்திட வேண்டும். இதனால் சாகுபடி செலவும் குறையும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. இதனை ஒவ்வொரு விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டன.
இயற்கை விவசாயம் குறித்து விவசாயி நல்லசிவம், முன்னோடி விவசாயிகள் நாச்சிமுத்து, இளங்கோவன், செல்வம் ஆகியோர் பேசினர். சிறப்பு நிகழ்ச்சியாக ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் முரளிதரன் பங்கேற்று, விவசாய பயிற்சி வழங்கினார்.
துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி உள்ளிட்ட பலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu