பள்ளி பாளையத்தில் கெட்டுப்போன 100 கிலோ ஆட்டிறைச்சி கைப்பற்றி அழிப்பு
பள்ளிபாளையம் இறைச்சி கடையில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
பள்ளிபாளையத்தில் கெட்டுப்போன 100 கிலோ இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் இறைச்சி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி, ஆட்டுக்குடல், கோழிக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், செம்மறி ஆட்டுக்கறியில் வெள்ளாட்டினை கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும், தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரங்கநாதன் சம்பந்தப்பட்ட இறைச்சி கடையில் திடீர் சோதனை மேற்கொண்ட பொழுது ,அங்கிருந்த குளிர்சாதன பெட்டியில் பாலிதீன் கவரில் ஆட்டுக்கறி மற்றும் ஆட்டின் குடல் உள்ளிட்ட இறைச்சிகள் இருந்தது தெரிய வந்தது .
இதனையடுத்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன சுமார் 100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, பள்ளிபாளையம் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று அழித்தனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமாக இந்த கடைக்கு ஆட்டுக்குடல் ஆட்டிறைச்சிகள் கொண்டு வந்து, விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே அதிகாரிகள் எச்சரித்த நிலையில், தற்போது புகாரின் பேரில் 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இந்த கடையில் இறைச்சி வாங்கும் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu