தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி

தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி
X

குமாரபாளையம் காட்டூர், விட்டலபுரி பகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் ரேவதி, நாகநந்தினிக்கு ஓட்டு சேகரிக்க வந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பேசினார்.

குமாரபாளையம் காட்டூர், விட்டலபுரி பகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

குமாரபாளையம் காட்டூர், விட்டலபுரி பகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் ரேவதி, நாகநந்தினிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் என்பது அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தரும் தேர்தல். நான் அமைச்சராக இருந்தபோது யாராலும் செய்ய முடியாத அளவிற்கு, அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், சாலை வசதி, சேலம் சாலை முழுவதும் அகலப்படுத்தப்பட்டு புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணி 15 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டது.

விட்டலபுரி சாலை மட்டும் நிலுவையில் உள்ளது. ஆட்சி மாற்றம் என்பதால் அதிகாரிகள் செய்ய மறுத்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பார்ப்பேன். அவர்கள் செய்யாவிட்டால் என்னுடைய எம்.எல்.ஏ. நிதியிலிருந்து நான் செய்து தர உள்ளேன். ராஜாஜி குப்பம் பகுதியில் உள்ளவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்கபடாமல் இருந்தது. முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு என்னிடம் கூறியதும் அதற்கான ஏற்பாடுகள் செய்து அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டது.

நாங்கள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றி தருகிறோம். புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதல் பெறப்பட்டு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 134 நகராட்சியில் எங்கும் இல்லாத வகையில் குமாரபாளையத்தில்தான் முதன் முதலாக நிறைவேற்றப்பட்டது. முதியோர் உதவித் தொகை, மின் இணைப்பில், குடிநீர் வரியில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் உடனுக்குடன் செய்து தரப்பட்டது. நகரில் உள்ள அனைத்து சாலைகளும் 6 கோடி ரூபாய் நிதி பெற்று புதிய தார் சாலைகளாக போடப்பட்டன.

உள்ளாட்சியில், நல்லாட்சி இருக்க வேண்டும் என்றுதான் இன்று அ.தி.மு.க.விற்கு அதரவாக ஓட்டு கேட்டு வந்துள்ளோம். தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவது தான் அவர்கள் வாடிக்கையாக உள்ளது. கடந்த ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்கள்.

சட்டமன்றத்தில் கருணாநிதியிடம் 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னது என்ன ஆனது? என ஜெயலலிதா கேட்டபோது, சட்டமன்றத்தில் கருணாநிதி சொன்ன பதில், மக்களுக்கு என் மனதில் இடம் தந்துள்ளேன் என்பதுதான். அதுபோலத்தான் அவரது மகனும் பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சி செய்து வருகிறார்.

நீட் தேர்வு ரத்து செய்து விடுவோம்; எங்களிடம் ரகசியம் உள்ளது; சூட்சுமம் உள்ளது; எப்படியும் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார்கள். 10 மாதங்கள் ஆன நிலையில் 4மாணவிகள், 2 மாணவர்கள் இறந்ததுதான் மிச்சம்.

கடந்த 2010ல் தி.மு.க., காங்கிரஸ் இருந்தபோது, காந்திசெல்வன் இருந்தபோதுதான் அந்த சட்டமே கொண்டு வந்தார்கள். ஏதோ நாங்கள் கொண்டு வந்தது போல் எங்கள் மீது கூறி வருகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று கூறினார்கள். 10 மாதங்கள் ஆகியும் தரவில்லை. கேட்டால் இன்னும் நான்கு ஆண்டு ஆட்சி உள்ளது; தருவோம் என்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று சொல்லி, பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைத்தார்கள். ஆனால் டீசலுக்கு குறைக்கவில்லை. மத்திய மோடி அரசு குறைக்கவில்லை; நாங்கள் என்ன செய்வது? என்று கூறிவிட்டார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும் குறைத்த மத்திய அரசு, தமிழகத்திற்கு மட்டும் குறைக்கவில்லை. கொடுத்த வாக்குறுதி போல் 4 ரூபாய், 5 ரூபாய் என்று கூறியது போல் அதையாவது குறைத்து இருக்கலாம். அதையும் குறைக்கவில்லை.

ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்களிடம் கூறினார்கள். அனைவரும் 5 பவுன் நகை அடகு வையுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம். வந்ததும் நகைக்கடன் தள்ளுபடி செய்து விடுவோம் என்றார்கள். 10 மாதங்கள் ஆகியும் இன்னும் அடமானத்தில்தான் நகைகள் உள்ளது. வெளியில் வந்த பாடில்லை. கேட்டால் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் என்றும்; போலி நகை, அப்படி, இப்படி என்றும் மழுப்பி வருகிறார்கள்.

இவர்கள் சொன்னதை நம்பி 43 லட்சம் பேர் நகைக்கடன் வைத்து தவித்து கொண்டு உள்ளனர். மகளிர் குழு, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி என்றார்கள். கல்விக்கடன் பற்றி கேட்டால் அது பற்றி சொல்ல மறுக்கிறார்கள்.

ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தார்களோ அந்த திட்டங்களை நிறுத்துவதுதான் குறிக்கோளாக உள்ளது. கூடிய விரைவில் அன்ன உணவகத்தை நிறுத்த போகிறார்கள். ஸ்கூட்டி திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்வோருக்கு 25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டி கொடுத்தோம். இப்போது அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். கேட்டால் பஸ் பாஸ் கொடுத்து விட்டோம். அவர்கள் பஸ்ஸில் சென்று விடுவார்கள் என்று கூறி வருகிறார்கள்.

இலவச பஸ் பாஸ் கொடுத்தது என்ன ஆனது என்றால், 10 பஸ் ஓட வேண்டிய இடத்தில் 5 பஸ்தான் ஓடுகிறது. நான் பிரச்சாரத்திற்கு வரும் போது பார்த்தேன். பள்ளிபாளையம் சாலையில், சானார்பாளையத்தில் 3 பெண்கள் கையை காட்டுகிறார்கள். ஆனால் பஸ் நிற்காமல் சென்று விட்டது. இலவசம் என்பதால் அப்படி செய்து வருகிறார்கள். அடுத்த தனியார் பஸ் வந்தால்தான் ஏறிப்போக முடியும். நான் இறங்கி சுமார் 50,60 வயதுள்ள அந்த பெண்களிடம் எங்கு போக வேண்டும் என்று கேட்டதற்கு, ஈரோடு போக வேண்டும் என கையைக் காட்டினோம் நிறுத்தாமல் சென்று விட்டார்கள் என்றனர்.

அடுத்து வரும் பஸ் ஏறி செல்லுங்கள் என சொல்லி வந்தேன். இப்படி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மீண்டும் பொய் சொல்லி உள்ளாட்சியிலும் வந்து விட்டால் மக்களை ஏமாற்றலாம் என்று எண்ணி வந்து கொண்டுள்ளனர். உங்கள் பகுதியில் லைட் எரியவில்லை, தூர் வாரவில்லை, சாலை பழுது, குடிநீர் வரவில்லை என்று சொன்னால் வரக்கூடிய முதல் நபர் உள்ளாட்சி தேர்தலில் உங்களால் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்தான்.

நல்லவர்களை தேர்வு செய்யுங்கள். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், எந்த திட்டமாவது செயல்படுத்த நிதி போதவில்லை என்று சொன்னால், எனது எம்.எல்.ஏ. நிதியில் இருந்து நிதி வழங்கி பணிகளை செய்து தருவேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, திராட்சை, வெல்லம் என பல பொருட்களை பொங்கல் பரிசாக கொடுத்தார்கள். அதன் பின் வந்த இடைப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாயும், கொரோனா காலத்தில் 2 ஆயிரத்து 500 ரூபாயும் தந்தார்கள்.

சட்டமன்றத்தில் பொங்கல் பரிசு குறித்து நாங்கள் கேட்ட போது, தருகிறோம் என்று கூறினார்கள். மூச்சுக்கு முன்னூறு முறை தமிழ், தமிழ் என்று சொன்னவர்கள்; பொங்கல் பரிசுப் பொருட்களை வட நாட்டில் வாங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் அரிசி, வெல்லம், சர்க்கரை, கரும்பு இல்லையா? எதற்காக கமிஷன் வருவதற்காக. அந்த வெல்லம் என்னாச்சு? இங்கு கொண்டு வருவதற்குள் உருகி விட்டது. பொருட்களில் கலப்படம். பப்பாளி விதையுடன் மிளகு கொடுத்தார்கள். பொங்கல் பரிசில் 500 கோடி ரூபாய் ஊழல் என்று எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லி வந்தார்.

நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், உண்மையில் ஊழல் நடந்துள்ளது என்று கூறி அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளாட்சியில் தி.மு.கவினர் வந்துவிட்டால் கொள்ளையடிக்கத்தான் பார்ப்பார்கள். மக்கள் நன்மை குறித்து கவலைப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன், துணை செயலர் திருநாவுக்கரசு, மாரிமுத்து, ராஜா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்