குமாரபாளையத்தில் 66 இடங்களில் தூய்மையே சேவை பணிகள்
குமாரபாளையத்தில் தூய்மையே எங்களின் சேவை பணிகள் நடந்தன.
HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தூய்மையே எங்களின் சேவை பணிகள் நடந்தன.
குமாரபாளையத்தில் 66 இடங்களில் தூய்மையே சேவை பணிகள் நடந்தன.
தூய்மை இந்தியா திட்டம் சார்பில் இந்தியா முழுவதும் தூய்மையே எங்களின் சேவை எனும்பணிகள் இன்று நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி குமாரபாளையத்தில் அனைத்து வார்டுகளில், வார்டுக்கு இரண்டு இடங்கள் வீதம் 66 இடங்களில் தூய்மையே சேவை பணி நடத்தப்பட்டது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சிகளின் நிர்வாக சேலம் மண்டல இயக்குனர், அலுவலக திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர்.
இதில் கூட்டு துப்புரவு பணி, குப்பை தேங்கியுள்ள இடத்தை தூய்மை செய்து கோலமிடுதல், பேருந்து நிலையத்தை தூய்மை செய்தல், அங்கன்வாடி வளாகத்தை தூய்மை செய்தல், கோவில் வளாகம், சமுதாய கழிவறைகள், ஆற்று படுகைகள் ஆகிய இடங்களில் தூய்மை பணிகள் செய்து கோலமிடப்பட்டது. இதில் ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சந்தனகிருஷ்ணன், ஜான்ராஜா, பொதுமக்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், குடியிருப்போர் நலச்சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர், அரசியல் பிரமுகர்கள், கவுன்சிலர்கள் பங்களிப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
கழிவுநீர் தொட்டி தூய்மை படுத்துவது குறித்து நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கூறியதாவது:-
நகராட்சி பகுதிக்குட்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்கு நகராட்சிக்கு சொந்தமான வாகனம் அல்லது நகராட்சி மூலம் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்காக 14420 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டம் 2013 கீழ் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதர்களை பயன்படுத்தினால், அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அதிக பட்சமாக 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்கள் ஈடுபடும் பொழுது, உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நகராட்சி வாகனம் அல்லது நகராட்சியால் உரிமம் பெற்ற வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.