அரசு புறம்போக்கு நிலத்தில் குடியேறும் போராட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள மோடமங்கலம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. வீடு இல்லாதவர்களுக்கு இந்த இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்ககோரி பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அந்த இடத்தில் தனிநபர் ஒருவர் அரசு உத்தரவை மீறி நிலத்தில் பள்ளம் தோண்டி மண் எடுத்து வந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட பாஜக செயலாளர் ஓம் சரவணா, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை போலீசார் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது கடந்த பல வருடங்களாக வீடு இல்லாமல் அவதிப்பட்டு வரும் தங்களுக்கு இந்த இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை சம்மந்தப்பட்ட வருவாய்துறையினரிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காத நிலையில் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் பள்ளம் தோன்றியது எப்படி என மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தோம். வீடு இல்லாதோருக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 400 வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அவற்றில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் .பொதுமக்களின் குடியேறும் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu