காசநோய் நோய் இல்லா தமிழ்நாடு திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் : 197 பஞ்சாயத்துகளுக்கு கலெக்டர் பாராட்டு

காசநோய் விழிப்புணர்வை வலியுறுத்தி, திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி மாணவிகள், காச நோய் இல்லா நாமக்கல் - 2025 என்ற வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
நாமக்கல்,
காசநோய் ஒழிப்பில் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்திய 197 பஞ்சாயத்துக்களுக்கு கலெக்டர் கேடயம் வழங்கிப் பாராட்டினார்.
நாமக்கல், பழைய மாவட்ட மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில், தேசிய காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு தின விழா நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, காசநோய் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார். அனைவரும் அதை திருப்பிக்கூறி உறுதிமொழி ஏற்றனர். தமிழ்நாடு அரசு தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 2025-க்குள் காசநோய் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2024-க்கான காசநோய் இல்லா ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்துக்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், மாநிலத்திலேயே அதிக அளவில் 197 பஞ்சாயத்துக்கள் காச நோய் இல்லாத பஞ்சாயத்துக்களாக தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் 83 ஊராட்சிகளுக்கு வெள்ளி பதக்கமும், 114 ஊராட்சிகளுக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளன.
விழாவில், காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 5 மருத்துவ பணியாளர்கள், அதிக காசநோயாளிகளை கண்டறிய உதவிய ஆஸ்பத்திரிகள் மற்றும் 20 காசநோயாளிகளுக்கு 8 மாதம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய தொண்டு நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வழங்கினார். மேலும், உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் காசநோய் இல்லா நாமக்கல் - 2025 என்ற வடிவில், ஒருசேர நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, துணை இயக்குநர் (காசநோய்) வாசுதேவன், ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu