மரவள்ளிக்கிழங்கு விலை சரிவை தடுக்க சேகோவிற்கு அரசு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

பைல் படம்
நாமக்கல்,
மரவள்ளிக்கிழங்கு விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, சேகோவிற்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
சந்திரசேகரன் (விவசாயி) : பருவநிலை மாற்றம் காரணமாக, அனைத்து பயிர்களிலும் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதற்காக, கல்குறிச்சி பகுதியில் மட்டும், ரூ.3 கோடி மதிப்பிலான பூச்சி மருந்துகள் விவசாயிகளால் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டால்தான், விவசாயிகளின் வாழ்வதாராம் பாதுகாக்கப்படும்.
மெய்ஞானமூர்த்தி (விவசாயி) : நாமக்கல் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், 32 கி.மி. தூரத்தில் உள்ள புதுச்சத்திரத்தில் பாசிப்பயறு போன்ற பயிறு வகைகளை கொள்முதல் செய்து வருகிறது. இவற்றை விரிவுபடுத்தி பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
பாலசுப்ரமணியன் (பொதுச்செயலாளர், விமுக) : மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து, சிவில் சப்ளை கார்ப்பரேசனுக்கு சர்க்கரை வினியோகம் செய்த வகையில், ரூ. 10 கோடி நிலுவை உள்ளது. நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், தென்னை மரத்தில் கருப்பு பூஞ்சான், வெள்ளை அசுவினி தாக்கம் 75 சதவீதம் உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த, வேளாண் விஞ்ஞானிகளை வரவழைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2011-12ல், மோகனூர் தாலுகா, வளையப்பட்டியில், தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மூலம், தடுப்பணை கட்டப்பட்டது. அந்த தடுப்பணை தற்போது காணாமல் போய்விட்டது. அதை வடிகால் வாரியத்தினர் தேடி வருகின்றனர். தடுப்பணையை கண்டுபிடித்து தர வேண்டும்.
ராஜேந்திரன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்) : மரவள்ளிக்கிழங்கிற்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, 17,000 ஹெக்டேரில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டது. அப்போது, ஒரு மூட்டை கிழங்கு, ரூ. 600 முதல் 700 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டிருப்பதால், கடுமையாக விலை சரிவடைந்து, ஒரு மூட்டை கிழங்கு ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால், சேகோவிற்கு அரசு விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே, மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகளை காப்பாற்ற முடியும் என கூறினார்.இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu