தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

தேசிய அளவில் தனித்துவ அடையாள எண் பெற சிறப்பு முகாமில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் பெறுவது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களைப் பெற தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கவும், குறித்த நேரத்தில் அரசு திட்டங்களின் பலன்களை விவசாயிகள் பெற ஏதுவாகவும், அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல் போன் எண், நில உடைமை விபரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி, விவசாயிகள் பொது சேவை மையம் சென்று அங்கும் நில உடைமை விபரங்கள் இணைக்கப்பட்ட பின், அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1,07,432 விவசாயிகளில் தற்போது 38,013 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கோ அல்லது அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்றோ தங்கள் நில உடைமை விபரங்கள், ஆதார் எண், மொபைல் எண் ஆகிய விபரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த தனித்துவ அடையாள எண் விவசாயிகளுக்கு வேளாண்மை தொடர்பான அனைத்து திட்டங்களையும் பெற உதவும் என்பதால், அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் உமா தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu