தமிழ்நாட்டிற்கான காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகா அரசு நாள்தோறும் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழ்நாட்டிற்கான காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகா அரசு    நாள்தோறும் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
X

வேலுசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு நீரை, கர்நாடகா அரசு விகிச்சார அடிப்படையில் தினந்தோறும் திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல்,

இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு உரிய பங்கீட்டு நீரை விகிதாச்சார அடிப்படையில் தினந்தோறும் திறந்துவிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு நீரை கர்நாடக அணைகளில் தேக்கி வைக்க எந்த விதமான தார்மீக உரிமையும் கர்நாடகாவிற்கு இல்லை. அதேபோல் மழைக் காலங்களில் அணையின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் திறந்து விடுவதை தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரின் அளவாக கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் கர்நாடக அரசு உபரி நீரை கணக்கில் எடுத்துக் கொண்டு கணக்கு சொல்வதை ஒரு போதும் தமிழ்நாட்டு விவசாயிகள் ஏற்கமாட்டார்கள்.

தமிழ்நாடு அரசு, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நலன் கருதி குறுவை நெல் சாகுபடி செய்ய வருகின்ற ஜீன் 12ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று, சென்ற வாரம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் மனதுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருந்தாலும், கர்நாடக அரசிடம் இருந்து கடந்த ஆண்டு பெற வேண்டிய, நிலுவையில் உள்ள பங்கீட்டு தண்ணீர் மற்றும் இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் பெற வேண்டிய பங்கீட்டு தண்ணீரை பெற்ற பிறகு, ஜீன் 12 ந் தேதி தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடி செய்ய தண்ணீர் திறந்தால் சாகுபடி முழுமைக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும்.

கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கர்நாடக அரசிடம் உரிய பங்கீட்டு நீரை கேட்டுப் பெறாமல், குறுவை நெல் சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்தால், போதிய தண்ணீர் கிடைக்காமல் தமிழக டெல்டா பாசன விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும். கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story