வாக்காளர் பட்டியல் சேர்க்கை, நீக்கல் முகாம்: தேதியை நீட்டிக்க கோரிக்கை

வாக்காளர் பட்டியல் சேர்க்கை, நீக்கல் முகாம்:  தேதியை நீட்டிக்க கோரிக்கை
X

கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன்(பைல் படம்)

கூடுதலாக இரண்டு நாட்கள் தேவைப்படுவதால் தேர்தல் ஆணையம் கூடுதல் நாட்களுக்கு உத்தரவிட வேண்டும்

தமிழகத்தில் கன மழை காரணமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவதற்காக திட்டமிடப்பட்ட நாட்களை தாண்டி மேலும் கூடுதலாக இரண்டு நாட்கள் தேவைப்படுவதால் தேர்தல் ஆணையம் கூடுதல் நாட்களுக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த ஒரு வாரமாக கன மழை முதல் மிக கன மழை வரை பொழிந்துள்ளது. இதில் ஒரு சில மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பொழிவு பதிவாகியுள்ளது. மழை வெள்ளத்தில் இருந்து அரசின் துரித நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் மீண்டு வருகின்றனர். அதிகமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒரு சில இடங்களில் மக்கள் நிவாரண முகாம்களிலும் தங்கி உள்ளனர். இதே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. கிராம பகுதிகளில் இது பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னும் அதிகமாக ஏற்படவில்லை.

இந்த சூழலில் தமிழக தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் இடம் மாறுதல் போன்ற பணிகளுக்கு சிறப்பு முகாம்கள் நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்றது. மேலும் இந்த மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் மீண்டும் நடைபெற உள்ளது. மேற்படி மழை பொழிவின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் ஆர்வத்துடன் பங்கேற்க முடியவில்லை.

எனவே தமிழக தேர்தல் ஆணையம் வரலாறு காணாத மழை பொழிவு மற்றும் மக்களுடைய தற்காலிக இன்னல்கள் மற்றும் பருவ கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு வேறு இரண்டு நாட்களில் மீண்டும் தமிழக முழுக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் இடம் மாறுதல் பணிகளுக்கு சிறப்பு முகாம் அமைத்தும் பொதுமக்களுக்கு ஓர் நல்வாய்ப்பு வழங்கவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளுக்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வாக்கு சாவடிகள் மூலமாக இன்னும் அதிகமான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

2023-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை பெறப்படுகிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு வரும் 26 மற்றும் 27 தேதிகள் மட்டுமல்லாமல் கூடுதலாக மேலும் இரண்டு நாட்களுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்காக ஒதுக்க வேண்டும். கனமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு இது உதவியாக இருக்கும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!