நாமக்கல்லில் ஏப்.26ம் தேதி காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கம்: கள் இயக்கம் நல்லசாமி தகவல்

நாமக்கல்லில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
நாமக்கல்,
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் .நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தீரன் சின்னமலை பிறந்த நாள் கொண்டாடும் வேலையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும். தற்போது, கள் இறக்குவோர் மீது போலீசார் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் படி கள் உணவின் ஒரு பகுதியாகும்.
தமிழகத்தில் காவிரி தீர்ப்பு குறித்து சரியான புரிதல் இல்லை. கடந்த 35 ஆண்டுகளாக கர்நாடக அரசு நீதிமன்ற தீர்ப்பை மதித்து தண்ணீர் திறப்பது கிடையாது. அம்மாநில அணைகள் உடையும் என்ற அச்சத்தில் தான் தண்ணீர் திறக்கின்றனர். பங்கீட்டு முறைப்படி கர்நாடகா அரசு தினசரி தண்ணீர் திறந்தால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்காது. இது பற்றி பார்லியிலோ அல்லது சட்டசபையிலோ யாரும் முறையாக கேள்வி எழுப்புவதில்லை. இதுபோல் கள் குறித்த புரிதலும் அரசியல் கட்சியினருக்கு கிடையாது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கள் குறித்த சரியான புரிதல் இல்லாமல் பேசி சென்றுவிட்டார். இப்பொழுது நயினார் நாகேந்திரன் வந்துள்ளார். அவர் என்ன பேசப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கள் உணவின் ஒரு பகுதி அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது, நமது அண்டை மாநிலங்களிலும், உலகம் முழுவதும் கள் இறக்கவும் பருகவும் தடை ஏதும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் கலப்படத்தை காரணம் காட்டி கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கலப்படத்தை அரசு தடுக்க இயலாவிட்டால் மாநில அரசு பதவி விலக வேண்டும். கள் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு பலமுறை கடிதம் எழுதி உள்ளேன். ஆனால் எந்த பதிலும் கிடையாது. கள் குறித்து மாற்றுக் கருத்து இருந்தால் எந்த அரசியல் தலைவர்களாக இருந்தாலும், எங்களிடம் விவாதம் செய்து அதில் வெற்றி பெற்றால் ரூ.10 கோடி பரிசுத்தொகையை பெற்றுச் செல்லலாம்.
செயின்ட்ஜார்ஜ் கோட்டையை பிடித்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஒருவர் சொன்னார். ஆனால் செயிண்ட்ஜார்ஜ் கோட்டையை பிடித்த பின் அது மட்டும் போதாது செங்கோட்டையும் பிடிக்க வேண்டும் என்கிறார். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆலைகளை திறக்க அனுமதி கொடுத்தது அனைத்து நோய்களுக்கும் காரணமாகும். இதை கட்டுப்படுத்தினால் எதிர்காலத்தில் மருத்துவமனை மற்றும் மருந்தகங்களுக்கும் தேவை இருக்காது. அப்போது ‘நீட்’டும் தேவைப்படாது. மருத்துவ கல்லூரிகள் பிற கல்லூரிகளை போல் மாணவர்களை தேடிப் பிடித்து கல்லூரியில் சேர்க்கும் நிலை உருவாகும்.
இந்தியாவில் தமிழகத்தில் தான் மரவள்ளி சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு உரிய விலை கிடைப்பதில்லை கடந்த ஆண்டு ஒரு டன் மரவள்ளி ரூ.11 ஆயிரம் வரை விற்பனையாது. தற்போது ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பயிர்களுக்கும் வெளிநாடுகளைப் போல் கிராப் பட்ஜெட் போட்டு விளைச்சலை கண்காணிக்க வேண்டும். நாமக்கல் நகரில், சேலம் ரோட்டில் உள்ள சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில், வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு, காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் விவசாய சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.
விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், கள் இயக்க உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu